செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

முதிய சரணாலையம்

உன் அழகினில்
உண்டாகி இருக்கும்
சிதைவுகளில் இன்னும்
புதைந்திருக்கின்றன
என்றன் மையல்கள்..

உன் கார்குழல் வெட்டும்
மின்னல் நரைகளில்
கன்னச் சுருக்கங்களில்
மேலும் கசிந்து கூடுகிறது
என் காதல்..

முகைகளாய் உதிர்ந்த
பல்லற்ற வாய்ச்சிரிப்புகள்
உன் பருவச் சிரிப்பை காட்டிலும்
மயக்கம் தருபவை..

கைக்கோலேந்தி கால் பின்ன
நீ நடக்கும் நடைகள்
அன்னங்களை மிஞ்சுபவை..

உன் சுருங்கிய கைகள்
என்னை சீந்து இன்பம்
தேவதைகளின் ஆசிக்கு
இணையானவை..

நடுங்கும் இதழ்களால்
நீயெனை அழைக்கும் வார்த்தைகள்
என் கவிதையைவிடினும் அழகானவை..

நீ என் காதல் பறவையின்
முதிய சரணாலையம்..

கருத்துகள் இல்லை: