திங்கள், 25 ஜூன், 2012

திடீரென முளைத்துவிடும் நதிதிடீரென முளைத்திருக்கும் இந்நதியை குறித்த
எந்த தகவலும் எந்த துப்பும் எந்த அறிதலும்
இல்லை என்னிடம்..

காற்றில் கூர்தீட்ட முயலும்
மொன்னை மடிப்புக்களில்
வெளிச்சத்தை மிளிர்த்தி ஓடும்
அதன் வனப்பு என்னை
அதன் மீது வாஞ்சையுற வைக்கிறது

நகரும் மேகங்களையும்
நெளியும் வானத்தையும்
கிழித்துள் பாய்ந்தொரு மீனென மாறிவிடும்
என் எத்தனிப்பை நடுக்கமுற‌ செய்கிறது
அதன் மர்ம ஆழம் குறித்த அச்சமென்றாலும்
நீந்துதலெனும் முடிவை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை

யாருடையது இந்நதி
யாருடைய கடலில் இது கலக்கிறது
யாரும் இதனுள் ஏற்கனவே நீந்துகிறார்களா
இது என்னுடைய நதிதானா
நான் சேர வேண்டிய கடலுக்குத்தான் போகிறதா
இனி என் நிர்வாண‌த்தை இதுதான் அறிய போகிறதா
என் முழுமையையும் இதுதான் சுவைக்கப்போகிறதா
அல்லது இதன் முழுமையை நாந்தான் சுவைக்க போகிறேனா
என கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில்
என் கால்நுனி வரை கரையை நகர்த்தி
தன்னை விரிவு படுத்திவிட்டது இந்நதி

சில்லிடும் ஈரக்கைகளால் கால்களை சுற்றி
பொதுக்கென உள்ளிழுத்து
ஒரு மலைப்பாம்பென விழுங்கி
நகர துவங்குகிறது சிறு சலனத்தோடு
பின்னிதன் சலனமடங்கிய வேளையில்
நீரில் கரைகிற பனிக்கட்டியென‌
இதனுள் விரவ ஆரம்பிக்கிறேன்
பிறகு இது என்னுடையதும்
நான் இதனுடையதுமாய் மாறிவிட்ட போதில்
காயாத தன்னீர மணலை என் கைகளில் கொடுத்து
வற்றிவிட்டது இந்நதி

இதே போன்ற நதியின்
ஒரு கரையில்
நீங்களும் கூட நடந்து கொண்டிருக்கலாம்
காயாத ஈர மணலை கைகளில் ஏந்தியவாறு..

ஒவ்வொருவருக்கும் எங்னேனும்
வாய்க்க பெறுகிறது இதுபோலொரு நதி
பல புதிர்க‌ளுடன்
வற்றுவதற்காக‌வே அல்லது
பெருக்கெடுப்பதற்காகவே

வெள்ளி, 22 ஜூன், 2012

இந்த நகரத்தின் முகமூடி அணிந்த அழகான பெண்கள்

வெயிலில் உருகாத வெண்ணை சிலைகளை போன்று உலா வரும் இந்த நகரத்தின் பெண்கள் யாவரும், பெரும்பாலும் டாப்ஸும், லெகின்ஸுமே அணிந்தவ‌ர்களாக இருக்கிறார்கள்

பொட்டில்லாத நெற்றியும், நேர்த்தி செய்து கொண்ட புருவமும், அஞ்சனமிட்ட கண்களும், ப்ளீச் செய்து கொண்ட வதனமும், உறையணிந்து செருப்பிட்ட கால்களும், மெகந்தி வரைந்த கைகளும் சிறிது நேரமேனும் உங்களை ஈர்க்காமல் இருக்க வாய்ப்பே இல்லை

பரப்பரப்பான காலையில் வாகனங்கள் செறிந்த சாலையில் இறங்கி நீங்கள் நடக்க முற்படுகையில், புத்தேளுலகுக்கு பெயர்ந்துவிட்டதை போலவும், இறுகியவுடை யணிந்த மங்கையரை காணும் போது தொன்சிற்பங்கள் நிறைந்த குகையொன்றில் நுழைந்துவிட்டதை போலவும் உணர்வு கொள்வீர்கள்

ஹரப்பா மொஹாஞ்சதாரா உருவாவதற்கு காரணமானவர்கள் இந்த நகரத்தின் மங்கையார்களாகவும் இருந்திருக்க கூடும் என்று நீங்கள் யோசிக்கமல் இருக்க மாட்டீர்கள்

இருசக்கர வாகணத்தில் இணையோடு நெருக்கமாக அமர்ந்து செல்வதையும், நெரிசலான பொதுவாகணங்களில் பிற ஆணகளுடன் சகஜமாய் அமர்ந்து பயணிப்பதையும், கூட்டமாய் ஆண்கள் நின்று புகையூதும் தேந்நீர்க்கடைகளில் வெகு சாதரணமாய் தனித்து நின்று தேந்நீர் அருந்துவதையும் பார்க்கையில், பால்மேனி பாவையரின் பக்குவமும், மனமுதிர்ச்சியும், ஆணுக்கு பெண் சமம் என்பதை அழுத்தமாய் செயல்படுத்தும் விதமும், முற்போக்கும், நிமிர்ந்த நன்னடையும் உங்களுக்கு வியப்பை தோற்றுவிக்கமல் இருக்காது

எழிலியர் அலையும் இந்த நகரத்தில் ஸேர் ஆட்டோக்கள் கக்கும் கார்பன் தடித்த டீசல் புகையில் இருந்து மூர்ச்சையாகமல் இருக்க நீங்கள் பழகி கொள்ள‌ வேண்டும்

தாரைவிட கருப்பான அதன் புகை உங்களின் ஆடைகளில் தன்னை நிரந்தரமாய் ஒட்டிவைப்ப‌தையும், அதன் வாசத்தை நீங்கள் வீட்டுக்கும் சுமந்து சென்று பிறரோடு பகிர்ந்து கொள்வதையும் தினசரியானதாய் பழகி கொண்டால், இந்த நகரத்தில் வாழ நீங்கள் தகுதி உடையவராகிவிடுகுறீர்கள்

சொல்ல மறந்துவிட்டேன், இந்த நகரத்தின் ஆட்டோகளை மட்டும் வாடகைக்கு எடுத்துவிடாதீர்கள், அதன் கட்டணம் சொந்தமாக‌ ஆட்டோ வாங்குவதற்கு ஆகும் செலவைவிட ஒரு பங்கு அதிகமாகும்

இந்த நகரத்துக்கு வந்த புதிதில் நிகழ்ந்த ஒரு சம்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்னை போன்ற கல்யாணமாகாத இளையஞர்களுக்கு அது சுவாரஸ்யமற்றதாகவும், வேதனை அளிப்பதாகவும், தம் எதிர்ப்பையும் கண்டிப்பையும் மிக வன்மையாக பதிவு செய்ய அவசியமுடையதாகவும் இருக்கலாம்

இந்த நகரத்தில் இஸ்லாமிய தொகை அதிகம் என்று நான் உத்தேசித்திருந்தேன். ஆனால் என் உத்தேசம் தவறு என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறேன் ( அட நிஜமாதாங்க, நம்புங்க) என்பதையும் புரிய வைத்தது

ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த பொழுதில்,

நான்: இந்த நகரத்தில் இஸ்லாமியர்கள் தொகை அதிகமோ ??

அவர் : இல்லையே, ஏன் அப்படி கேட்குறீங்க ??

நான் : இங்க பெரும்பாலான பெண்கள் முக்காடிட்டு முகத்தை மறைச்சுக்கிறாங்களே, அதான் கேட்டேன்

அவர் : ஹா ஹா ஹா ஹ்ஹ ஹாஹ்ஹா

நான் : ????? ஏன் சிரிக்கிறீங்க ???

அவர் : அட பாவி நீ இவ்வளவு அப்பாவியா, இந்த ஊர்ல மாசு ரொம்ப ஜாஸ்தி அதான் வெளிய வரும் போது பொண்ணுங்க முகத்தை மூடிக்கிறாங்க, ஆம சில ஆம்பிளங்களும் முகத்தை மூடிக்கிறத நீ பார்க்கலயா ???

நான் : யோவ், அவங்யளலாம் யாருயா கவனிச்சா ? அது மட்டுமில்லம அவங்ய முகத்த பொத்துறத பத்திலாம் யாரு கவலப்பட்டடா!!!!

இப்படியாக‌ இந்த நகரத்தின் அழகான பெண்களை முகத்தை மூடி மறைக்க வைக்கும் மாசால் பாதிக்கப்டுவது என்னவோ என்னை போன்ற இளைஞர்கள் தான், ஆமாம், அவர்களின் மதி பொழியும் முகத்தை காணாமல் என்னை போறோர் மன உலைச்சலைக்கு உள்ளாவதையும், ஆழ்ந்த வேதனை அடைவதையும், மிக பெரிய ஏமாற்றத்தில் வீழ்வ‌தையும் இந்த சமூகம் கருத்தில் கொள்ளுவதே இல்லை

மலைக‌ளை வெடிக‌ளால் நுணுக்கி, ம‌ர‌ங்க‌ளை வெட்டி ப‌சுமையை கொன்று, புறாக்களையும், மைனாக்க‌ளையும், கிளிக‌ளையும், குருவிக‌ளையும், குயில்க‌ளையும், அட‌ காக்கைக‌ளை கூட‌ விர‌ட்டி அடித்து, பெரிய பெரிய கட்டடங்களை நிரப்பி, அத்துமீறி எந்த திசையிலும் தன் கூரிய கால்களோடு வெயில் மேயும் வெம்மையுடையதகாவும், பறவைகளே இல்லாததாகவும் மாறிவிட்ட இந்த நகரத்தை, பாவையரும் பால்முகத்தை மறைத்துக் கொண்டு உலவினால் ஒழிய வாழுதற்கு சாத்தியமும் எளிதுமற்ற‌தாக மாற்றிவிட்டீர்கள்
நாளை வீடுக்குள்ளும் ஒருத்தரை ஒருத்தர் காணமல் வாழுதற்கு பழகி கொண்டாலன்றி வாழுதல் எளிதல்ல என்னும் நிலையை உருவாக்குவீர்கள்

கார்பன் புகை அடர்ந்து எப்போதும் இரவு போலவே காட்சியளிக்கும் நகரத்தில் வாழும் சாபத்தை எதிர்கால சந்ததிக்கு அளிக்கவும் முடிவு கட்டிவிட்டீர்கள்
துப்பட்டா முகில் மறைக்காத சந்திர வதனத்தை காணுவதற்கேனும் இந்த நகரத்துக்காக ஏதாவது செய்யவேணும், எஞ்சோட்டு தோழர்களே..