Photobucket

புதன், 25 பிப்ரவரி, 2009

அந்திமத்தில் அந்த நிலா





எதிராளியின் எல்லா காய்களையும்
காம சதுரங்கத்தில்
வெட்டி சாய்த்து
அடுத்த அடியில்லாமல்
ராஜாவை முற்றுகையிடும்
ராணியவள்..
உடைத்தோகை
உதுத்தாடும் கேப்ரே மயில்..

கரப்பான்பூச்சிகளாய் மீதூரும்
கண்களில் அருவருப்புண்டாலும்
மண் சிற்பமாய்
மரத்துவிட்டது மனதும் உடம்பும்
பழக்க போக்கில்..

சிகரெட் புகை
ஊடே பூக்கும் நிலவாய்
சிருங்கார சேற்றின்
செந்தாமரையாய்
விரக ஸ்தலத்தின்
வழிபாட்டு தேவதையாய் நாளும்
பலப்பல அவதாரங்கள் அவளுக்கு..

மன்மதனின் பிரம்மாஸ்திரமாய்
எந்த சிவ நோம்பையும்
நொய்ய தகர்த்த அழகுதிறம்
குலைய துவங்கிய பின்
குறைய துவங்கினர் நுகர்வோர்கள்..

யார் யாரோ களித்தூடிய
சதை சிலையை
விருந்தோம்ப விழைவுண்டது
காசநோயும்..

கட்டிலில் சிதறிக்கிடக்கிற
சல்லாப சிரிப்புகளையும்
சிருங்கார தெறிப்புகளையும்
அதிர்த்திக் கொண்டிருக்கிறது
இரும்பல் சப்தங்கள்..

மங்கிய மலராய் உதிர்ந்த
தேக சருகுக்கு
உதவ மறுத்து
உவட்டி கொண்டிருக்கிறது சுற்றம்..

தற்போது
மாத்திரைக்கு மட்டுமல்ல
மரணத்திற்கும் வழியில்லை
அவளுக்கு..

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம்ம்... வலியுண்டு... வழியில்லை!

ஆதி சொன்னது…

//ம்ம்ம்ம்... வலியுண்டு... வழியில்லை!//

நன்றி நிசி..