வியாழன், 25 பிப்ரவரி, 2010

அனாதரவான வார்த்தை
திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துழாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..

புதன், 17 பிப்ரவரி, 2010

துரோகத்தின் கத்தி
முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..