செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நெய்தல்
உன் கதுப்பை
தோள்களில் சாய்த்திருந்தாய்

உன் கன்னம் வருடி
உச்சந்தலை மோந்த பொழுதில்
நாணம் முகத்தில் விரவ‌
மேலே விரித்த விழிகளால்
எனைப்பார்த்தவாறு
நெருக்கமானாய்

பொட்டற்ற உன் நெற்றியில்
முத்தப் பொட்டிட்ட தருணத்தில்
சின்ன இதழ்கள் மெல்ல நெகிழ்ந்து
சிந்திய தாபங்களை
கைகளில் ஏந்தி
உன்னை இறுக அணைத்துக் கொண்டேன்

மீண்டும் என் தோள்களில்
சாய்ந்து
கோலவிரல்களால் என் மேல்
கோலம் போட‌
உன் பூமுகம் அள்ளி
என்ன என்றேன்

தீரா காதலின்
ஏக்க உணர்வெல்லாம்
குழைந்த மென்குரலில்
"எனக்கு உன் கூட‌
எப்பவும் இருக்கனும்"
என்றாய்

அந்த வார்த்தைகளில்
மேலும் ததும்பி
மீதமின்றி வழிந்துவிட்ட
என் முழுமையையும் திரட்டி
உன் இதழ் குளத்தில்
பாய்ந்து மீனானேன்
கிரங்கிய உன் விழிகளில்
நெளிய துவங்கின‌
வட்ட வட்ட அலைகள்

சனி, 8 செப்டம்பர், 2012

சுவை


என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை

தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன‌

பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது

மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய் மாறி
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

கூட்டித்தள்ளிவிட முடிகிற‌
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல‌
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.

யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!

துரோகம் செய்த ஒருவனை
 


உனக்கு துரோகமிளைத்தவனை
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில்
அவன் அறைக்குள் பெற்றோலூற்றி
நெருப்பு வைக்கலாம்

நல்லவிதமாய் உறவாடி
நயவஞ்சக காய்களை நகர்த்தி
வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்

ஊர்பூராவும் அவனை பற்றி
அவதூறு பரப்பலாம்

பார்க்கிற இடத்திலெல்லாம்
பாளாரென அவனை அறைய சீறிபாயலாம்

விடுதியொன்றில் எதேச்சையாய்
சந்திக்க நேர்கையில்
முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்

கூலிப்படை கொண்டு
குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்

அவன் குடும்பத்தில்
உட்பூசல் உண்டாக்கி நிலைகுலைக்கலாம்

காலம் முழுக்க அவ்ன் செய்ததை
எண்ணி எண்ணி
சபித்து கொண்டே இருக்கலாம்

ஒவ்வொரு பொழுதும்
அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்

என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய‌ போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...

உன் காதல் கடிதங்களில்


உன் காதல் கடிதங்களில் இருந்து
விரிகிற எனக்கான புல்வெளியால்
நிரம்பிவிடுகிறது எனது அறை

சாயம் போகாத
ஒரு மயிலின் நடனத்தில் துளிர்க்கும்
மழைநாளின் சில்லிப்பையும்
தலைவருடலுக்கு ஏங்கும்
நாய்க்குட்டியின் குழைவையும்
உண்டாக்கும் உன் வார்த்தைகள்
உறிஞ்சி குடிக்கின்றன
என் சிறிது நேரத் தனிமையை...

அழுத்தமாய் நீ பதித்தனுப்பும்
உன் வண்ண இதழ்களின் சுவட்டிலிருந்து ஊறும்
எச்சில் காயாத முத்தங்களில்
ஈரம் ஆறாமல் இருக்கிறது
யுகயுகங்களாய் தணியாத உன் பேரன்பு..

புரியாத கவிதையை போல நீயும்


Wallpapers Sad Boy Pencil Sketches Mobile Black White And Widescreen   1024x768புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்

சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன

கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது

உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ

புரியாமலும்.....

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அவ‌ன்

தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்

த‌ன்னுடைய‌ அதிந‌வீன‌ பொய்க‌ளால்
சாதுர்ய‌மாய் என்னையும் அந்த‌ க‌ற்ப‌னை உல‌க‌த்துக்கே
இட்டுச் சென்று
அத‌னை உண்மை என்று ந‌ம்ப‌வைத்துவிடுகிறான்

பிற‌கொரு த‌ருண‌த்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகச‌க் க‌தைக‌ளை
அவ‌ன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுக‌ல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க‌ ‌
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்

அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த‌ விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது

அவ‌ன் க‌ற்ப‌னை உல‌க‌த்தில் கூட‌
யாரையும்
ச‌ந்தேக‌த்தோடும்
அவ‌ந‌ம்பிக்கையோடும்
குழ‌ப்ப‌த்தோடும்
ப‌ய‌த்தோடும்
பொய்க‌ளோடுமே அணுகுகிறான்

அவ‌ன் த‌ன் ஒவ்வொரு மாந்த‌ரையும்
அதி தீவிர‌ க‌ண்காணிபபுக் குட்ப‌டுத்தி வைத்திருக்கிறான்

சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவ‌ன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்‌
என‌ எனக்கு தெரியும்

ஆதலாலே
தான் பொய்க‌ளிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவ‌னின் ஸ்திரமான ந‌ம்பிக்கையை
நானும் திட‌ப்ப‌டுத்திக் கொண்டே இருக்கிறேன்

நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே‌ பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்க‌ள்

விண்மீன்கள்நிதம்நிதம் வானை
நிமிர்ந்திவள் பார்த்தால்
நீங்காமல் பதிந்துவிட்ட
நீள்விழி சுவடுகள்

பாவையர் மேனியை
பகல்விளக்கில் சுட்டதற்கு
மாலையில் விம்மிடும்
மேல்கருத்த வானம்


விண்ணவள் ஒருத்தியை
விண்ணவன் நோக்கையில்
மின்னவள் விழிகளை
மீறிவிழுந்த நாணத்துளிகள்

ரதியவள் ஆடிடும்
ரம்மிய அழகினில்
மதிகெட்ட வானவர்
வார்த்திட்ட ஜொள்ளுகள்

அங்கொரு ஆண்டவன்
அந்திரமாக மனைவியை
அணைத்திடும் முன்பொழுதில்
அவிழ்த்திட்ட ஆபரணங்கள்

இங்கொரு ஆண்டவன்
இன்பத்து பாலிலே
திளைத்திட்ட தருணத்தில்
திமிறிய விரகங்கள்

விண்ணக வீதியில்
விளையாட்டு மகிழ்வினில்
சின்னஞ் சிறியவர்
சிந்திய சிரிப்புக்கள்

வாலிபை ஒருத்தி
வடிவாய் உருட்டிய சோழிகள்
தோழி ஒருத்தி
தொலைய வீசிய வட்டாங்காய்கள்

கற்பகதருவிலே தேவப்பறவைகள்
கட்டிய கூடுகள்
காமதேனுவை கறக்கையில்
சிதறிய காம்பு தூறல்கள்

நாங்கள்


இருவர் பிரிந்து போனார்கள்

நாங்கள் பேசத்துவ‌ங்கினோம்
பேசினோம் பேசினோம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அவர்களை குறித்தே
பேசினோம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் விவாதம் நடத்தினோம்

அவர்களைவிட நாங்கள் நியாயம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கோவம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் காரணங்கள் அதிகம் சொன்னோம்

அவர்களைவிட நாங்கள் நிகழ்வுகளை ஆராய்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் தூரோகத்தை பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கேள்விகள் கேட்டோம்

அவர்களைவிட நாங்கள் வழக்கை விசாரித்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்ப்பை ஏற்றினோம்

அவர்களைவிட நாங்கள் அவர்களை பிந்தொடர்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் ஆனந்தம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் தூரம் பிரிந்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்மானமாய் தீர்க்கமாய் திண்ணமாய் இருந்தோம்

அவர்களை விட நாங்கள் தாயாரகவே இருக்கவில்லை

ஒருநாள் அவர்கள் இணைந்துவிட்டார்கள்

நாங்கள் அவர்களை இணைந்தது குறித்து பேச துவங்கிவிட்டோம்

காதல் நெகிழி
இப்படி அழகாய்
உதட்டை பிதுக்கி சொல்வாயானால்
எத்தனை முறையானாலும்
நிராகரிக்கப்பட தயார் என்று
நீ சொன்னத் தருணத்தில்
உன் காதலின் துளி
என்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது

மதுவில் மித‌க்கும்
ப‌னிக்க‌ட்டியென‌
க‌ரைய‌ துவ‌ங்கிவிட்டேன்
உன் காத‌லில்

நீ ர‌சிப்ப‌த‌ற்காக‌வே
என்னை அழ‌காய்
வைத்துக் கொள்கிறேன்

நீ பொறாமைப்ப‌ட‌வ‌த‌ற்காக‌வே
பிற‌ ஆண்க‌ளுட‌ன் பேசுகிறேன்

மீண்டும்
உன் காத‌லை நீ சொல்வ‌த‌ற்காக‌வே
உன்னோடான‌ த‌னிமையான‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளை
உருவாக்குகிறேன்

நீ என்னை பார்க்காமல் போன‌
பொழுதுக்காக எல்லாம் உன்னிடம்
சண்டையிட காத்திருக்கிறேன்

காதல் என்னை மீண்டும்
சிறுப்பிள்ளையாக்கிவிட்டது

தன் கிறுக்குதனங்களை எல்லாம்
என்னை செய்ய வைத்து
வேடிக்கைப்பார்க்கிறது

புரிந்து கொள்ள‌டா
உன் அண்மையும்
தொலைவும்
என‌க்கு ப‌த‌ட்ட‌மான‌தாக‌வே இருக்கிற‌து...நெகிழி=பிளாஸ்டிக்

புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..
மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..

ஒரு கடைக்காரனிடம் விலை பேசுவதில் இருந்து
பக்கோடாவுக்கு கொஞ்சம் கொசுறு வாங்குவது வரை
சாமர்த்தியம் போதாதவனாகவே பார்க்க‌ப்ப‌டுகிறேன்

இந்த அவசர யுகத்தில்
அவனவனுக்கு வேண்டியதை அவனவனும்
அவனவனை பற்றி அவனவனும்
சுயநலமாய் யோசித்து பூர்த்தி செய்து கொள்ளும் நிலையிலும்
அடுத்தவனை மட்டம்தட்ட அமையும்
சந்தர்ப்பத்தை தவறவிடுவதே இல்லை

"இத‌ற்கு போயா இவ்வ‌ள‌வு விலை கொடுத்த ?‌"
என்கிறார்கள்
மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..

மனவளர்ச்சியற்றவனின் கவிதைபறவைகளை பற்றி எழுதலாமென்று இருக்கிறேன் இக்கட்டுரையில். சிங்கங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆண் சிங்கம் என்றால் இன்னும் அதிக விருப்பம், கம்பீரமான அதன் கர்ஜனை, இறுமாந்த அதன் நடை, கர்வமான அதன் பார்வை, பஞ்சு போன்ற அதன் பிடறி என ஆண் சிங்கத்தின் அழகை ரசிப்பதில் அலாதியான பிரியம் எனக்கு..

அந்த யானை அவனுக்குள்
நுழைந்த பிறகு
மிக ஆக்ரோசமாய் அவன் மாறி போனான்,
அத்தனை பொருட்களையும்
மிக வெறியோடு கெடாசினான்
குலை நடுங்குகிற அளவிற்கு பிளிறி
பெரும் சத்தமெழுப்பி எல்லோரையும்
அச்சரமாய் ஆக்கினான்,
அவன் சுற்றமே மிரண்டலறி
பயத்தில் பதுங்கி இருந்தது,
திடீரென பூத்த ஒரு பூவென்றின்
மடியில் படுத்து அந்த யானை தன்
மதத்தை நீக்கி கொண்ட போது
அவன் சுற்றும்
நிலா வெளிச்சத்தில் அடர்த்தி இழந்த
இருளில் மின்னும் நட்சத்திரங்களை
ஏந்தி கொள்ளவதை போல் விரிந்திருக்கும்
மரங்களின் பரப்பை போல
ரம்மியமான பிராந்தியமாக மாறி இருந்தது

இக்கதையில் மதயானையையும் பூவையும் பயன் படுத்திக் கொள்ள அனுமதி கேட்ட தருணத்தில், யானை ஏற்கனவே கதைக்குள் இடம்பெயர்ந்திருந்தது, புலியின் பாதங்களும், மலைப்பாம்பை போன்ற துதிக் கையும், ஓநாயின் தலையும், நரியின் பார்வையும் கொண்ட அதனை யானை என்று என்னால் சொல்லயிலவில்லை, பூவிற்கும் அந்த யானைக்கும் உள்ள பிணைப்பை பற்றி எழுதவே இக்கதையை ஆரம்பிக்கிறேன் நான், இல்லை ஆரம்பிக்கிறான் அவன் இல்லை இல்லை ஆரம்பிக்கிறீர்கள் நீங்கள்.

ம்..
சரி சொல்லுங்கள்
எப்படி இந்த கதையை முடிக்க போகுறீர்கள்

பைத்தியம் பைத்தியம்

இது கதையல்ல கவிதை

நீ தான் பைத்தியம்

இது கட்டுரை

பைத்தியம்........................................... பைத்தியம்......................................... பைத்தியம்...................................................... பைத்தியம்......................................................... பைத்தியம்...................... பைத்தியம்.................................................. பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் எல்லாரும் பைத்தியம்

எனக்காக இல்லாவிடினும் யார் யாருக்காகவோ
வளர்த்த ஆடுகளும் கோழிகளும்
வயதாகி பேரன் பேத்தி எடுத்திருக்குமோ
எங்காவது ஒரு சந்தையில் காசாகவோ ?
ஏதாவது ஒரு விருந்தில் கறியாகவோ
ஆக்கப்பட்டிருக்குமோ ?

வளர்த்த செடிகளுக்கும் கொடிகளுக்கும்
என் ஸ்பரிசமும் வாசமும்
நினைவிருக்குமோ ? இருக்காதோ ?
இல்லை அவைகளே
தடமின்றி சுவாசமிழந்திருக்குமோ ?

என் முகத்தோடான பரிச்சயம்
அண்டைவீட்டுக்காரர்களுக்கு இருக்குமோ ?
அல்லது
ஐயத்தோடான பார்வையை
என் புன்னகைக்கு பதிலளிபார்களோ ?

கூரைவீடெல்லாம்
காரைவீடாகி இருக்கிறது..

பிழைப்புக்கு வெளியூர்
பெயர்ந்தவர்களின் வீடுகள் சில
பாழடைந்து கிடக்கிறது..

ஒரு புறம் தென்னையும்
மறுப்புற வயலும் அணி வகுத்த
ஒற்றையடிப்பாதை
தார்ப்பாதையாகி
தென்னையும் வயலும் இல்லாத
வெயில் பாதையாகி இருக்கின்றன..

வயலில் வெள்ளை மொட்டுக்களாய்
பூக்கிற கொக்குகள் எல்லாம்
எந்த திசையில் திரிகின்றனவோ ?
அவைகளுக்கு இறையாகிற
தவளைகளும் மீன்களும்
எங்கு ஜீவிக்கின்றனவோ ?

என்னத்தான் வெளிநாடு சென்று வந்தாலும்
'பஞ்சம் பிழைக்க' என்பதுதான்
சரியாக பொருந்துகிறது..

போனவையோடு போனவை பல
வந்த போதும் இழந்திருப்பவை பல
எனினும்
மீண்டும் போக வேண்டும் என்பதில் தான்
கவனமாக இருக்கிறது புத்தி..

எனக்காக இல்லாவிடினும்
யார் யாருக்காகவோ

ம‌க்க‌ட்பேறுஇருட்டான ஒரு பாதையில் இருந்து
தப்பித்து வெளியேறும்
பயத்தோடே இருக்கிறது
இன்றைய கலவியெல்லாம்

பதினைந்தாண்டாக‌
குழந்தை இல்லாததின் பழியை
இம்முறையேனும் அகற்றவேண்டும்
எனும் முனைப்போடே நிகழ்வதனால்
பரவ‌சத்தை காட்டிலும் பெரும்பாலும்
பதட்டமே பெருக்கெடுக்கிறது

பாலியல் புத்தகமனைத்தும்
பக்கம் மிஞ்சாமல் கற்று
ஊழியல் பார்த்து
உதிரம் கழியும் விடாய் பார்த்து
காமம் பழகி
அடுத்தமுறை அடிவயிறு பிடித்து
அவள் அமரும் போது
சவ ஊர்வலம் போன தெருவில் வீசுகிற‌
மரணம் வாசமே பரவுகிறது
வீடு முழுக்க‌

காதலுமில்லாமல்
காமமுமில்லாமல்
கட்டாயத்திற்காக‌
சுவாரஸ்யமற்று மாத்திரையின் உந்துதலால் நிகழும் விரவுதல்
வெறுமையானதாகவும்
விரக்தியானதாகவும்
தோல்வியை நினைந்த அச்சகரமானதாகவும்
தன் பிறப்புறுப்பு தெரிவதறியாமல்
தாந்தோன்றியாய் அலையும்
மனபிறழ்ந்தவனின் நீக்க முடியாத‌
மன அழுத்தை பாய்ச்சுவதாகவும்
இருக்கிறது

குழந்தையின்மை இந்த துக்கம்
ஒவ்வொரு பிள்ளையில்லாதவருக்கும்
பகலை காட்டிலும்
இரவே பீதியுண்டாக்குவதாய் இருக்கிறது
தனிமையே அமைந்துவிட கூடாதென்னும்
பிராத்தனை உடையதாகவும்
கலவியே நிகழ்ந்துவிட கூடாதென்னும்
பயமுடையதாகவும் இருக்கிறது

காமம் பழகுதல்
மன அழுத்தத்தை குறைக்குமெனும்
விஞ்ஞான கூற்று
குழைந்தையற்றோற்கு பொருந்துவதே இல்லை
காமம் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது..

விழாக்க‌ளும்
ச‌ந்திப்புக்க‌ளும்
தெரிந்தே ம‌ற‌க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தாக இருக்கின்ற‌ன‌
"எத்தனை குழ‌ந்தைக‌ள் ? அல்ல‌து
இன்னும் பிள்ளை இல்லையா ? "
எனும் கேள்விக்களுக்காகவே

ஞாயிறு, 15 ஜூலை, 2012

அபயக்குர‌ல்
இந்த தெருவில் வசிப்போர் யாவரும்
என் கூக்குரலுக்கு செவிமடித்தாரில்லை

என் அலறலையும் கூச்சலையும்
பொருட்படுத்தினாரில்லை

உரத்து கத்தி
ஓங்கி அறைந்தும்
இந்த வீட்டின் கதவை திறந்திட
யாரும் முன்வந்தாரில்லை

தாளமுடியாததாக இருக்கிறது இந்த தனிமை
அச்சமுறுத்துவதாக இருக்கிறது இந்த வெறுமை
என் குரலுக்கு செவிமடித்து
தயைகூறுங்கள்

யாரேனும் வாருங்கள்
இதை வாசிக்கிற
நீங்களேனும் என் மன உணர்வை புரிந்து கொள்ளுங்கள்
என்னை அடைத்திருக்கும்
அந்த வீட்டின் கதவை திறவிடுங்கள்

என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
என்னோடு கைகுலுக்குங்கள்
எதனை பற்றியாவது கொஞ்ச நேரம் உரையாடலாம்
உங்கள் குழந்தைகளை என்னுடன் விளையாடவிடுங்கள்
ஒதுக்காதீர்கள்
உங்கள் காஃபி மேஜயில் அமர்த்தி
உபசரிக்காவிடினும்
ஒரு முறுவல் பூத்திடுங்கள்
எனக்கு போதும்
நம்புங்கள்
உங்களுக்கு நான் உபத்திரம் தரமாட்டேன்

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
யாருக்கும் கேட்பதில்லை இறந்தவர்களின் குரல்களென..
இதை வாசிக்கிற நீங்களேனும் இரங்குங்கள்...

சில்லுகள் - 2
புன்னகை

எப்போதும்
எனை கடந்து போகையிலெல்லாம்
மறவாமல் ஒரு புன்னகையை உதிர்க்கும்‌
எதிர்வீட்டு தாத்தாவின் மரணத்தை
அறிந்த தருணத்திலிருந்து
ம‌ன‌தை குடைந்து கொண்டிருக்கிற‌து
போனமுறை அவருக்கு உதிர்க்க‌ த‌வறிய‌
பதில் புன்னகை

விடுவித்துக் கொளல்

இந்த வாழ்வின்
எல்லா துன்பத்துயர நெருக்கடி காரியங்களிலிருந்தும்
என்னை ஒட்டுமொத்தமாய் விடுவித்துக் கொள்வதென‌
தீர்மானித்தப் பிறகே
உன்னை இன்னும் தீவிரமாய்
காதலிப்பதென்று முடிவெடுத்தேன்

இரண்டு கவிதைகள்

பெருமதில்களால் நிர்மானிக்கப்பட்ட‌
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட‌

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புரப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு வேதைப்படுமென்று
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை

வியாழன், 12 ஜூலை, 2012

செறிவிழந்த இரவும் அதன் காமமும் தனிமையும்...

செறிவிழந்த ஒரு இரவின் இருளில்
ஊளையிடும் வேட்டைமிருகமென
அலைகிறது காமம்

அது
என் உடற்காட்டின் எல்லா மூலைவிரையிலும்
தன் ஈரநாவினை ஒரு சர்ப்பமென நெளியவிட்டு
என் பரப்பெங்கும் மூட்டுகிறது
மெலிந்த உஸ்ணத்தை

அறை விளக்கின் வெளிச்சத்தில்
ஊடிய நிலா ஒளியாய்
அது என்னை தன்னுள் கரைக்க ஆரம்பித்த
தருணத்தில்
என் அறைக்கதவை திறந்து கொண்டு நுழைகிறார்கள்
இதுகாறும் நான் சந்தித்தப் பெண்டீர் யாவரும்.

இந்த காமத்தின் வேட்டைமிருகத்துக்கு
அவர்கள் உவப்பளிப்பவர்களாக இல்லாததால்
யாவரையும் நிராகரித்து
என்னையே இன்னும் குரூரமாய் புசிக்கிறது அது

என் பலம் முற்றையும் இழந்து
அதனுள் நான் அடங்கி ஓடுங்குகையில்
ஒரு மதயானையென மூர்க்கமாய் என்னை
தனிமையின் மேய்ச்சல் நிலத்தில் எறிந்து
மேலும் என்னை வேட்டையாடுகிறது

என் அறைக்குள் நுழைந்த பெண்டீர்
இன்னும் போகாமலேயே இருக்கிறார்கள்
அவர்கள் யாவருக்கும் விடைக்கொடுத்து
அறை கதவை சாத்த மனமற்றிருக்கும் வேளையில்
இன்னும் கடப்பதற்கு சாத்தியமற்ற நெடுந்தொலைவோடு இருக்கிறது
செறிவிழந்த இரவும்
அதன் காமமும்
தனிமையும்...

ஆபாச நகைச்சுவை

ஒரு பயணம்..

அனைவரையும் போலவே
ஆபாச நகைச்சுவை ஒன்றையும்
சுமந்து விரைந்தது ரயில்..

மற்றவர்கள் போல்
நானும் படித்தவுடன்
சிரித்துவிட்டேன் முதலில்..

பிறகொரு அருவருப்பு உண்டானது
அதை எழுதியவர் மேல்..

அதை எழுதியவர் யாராகவும் இருக்கலாம்
அதே ரயிலில் பயணம் செய்தவாறும் இருக்கலாம்..

இதே நகைச்சுவையை
வேறெங்கோ எழுதிக்கொண்டோ
பகிர்ந்து கொண்டோ இருக்கலாம்
இத்தருணத்தில்..

நாளை நானும் வேறொருவருடன்
இந்நகைசுவையை பகிர்ந்து கொண்டு
ஆபாச சிரிப்பொன்று சிரிக்க நேரலாம்..

இங்கு சிலரின் மனதில்
இது ஒத்த வேறு நகைச்சுவை ஊறலாம்..

என்னைப் போல் இங்கு வேறொருவரும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்..

இல்லை இந்த எதுவுமே நிகழாமலும் இருக்கலாம்..

ஊற்றெடுக்கும் எண்ணங்களில் ஊடே
என் நிறுத்தம் வர
இறங்க ஆயத்தமாகிறேன்..

அவரவர் நிறுத்தங்களில்
அவரவரும் இறங்கி சென்றவிட கூடும்
இந்த நகைச்சுவையை
ரயிலில் இருந்தும்..
மனதில் இருந்தும்..
இறக்கிவிடாமல் என்னை போல்.

புதன், 11 ஜூலை, 2012

நடிகையுடன் சிக்கியவர்கள்

நடிகையுடன் சிக்கிய
தலைவரின் ஒழுக்கததைப் பற்றி
எல்லொரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

வசைமொழிகளால் அந்நடிகையை விமர்சிக்கிறார்கள்..

தலைவரின் முந்தைய சல்லாப கதைகளை விவாதிக்கிறார்கள்

யாரும் நினைக்கவும் தயாராக இல்லை
அவளின் அதிரும் சதைகளின் சிந்தனையில்
தன் மனைவியுடன் உறவு கொண்ட துரோகத்தை பற்றியும்..
அந்த தலைவரும் நடிகையும் சிக்கிய தருணத்தை
எண்ணி விரகத்தீ/தில் எரிந்தது பற்றியும்..

செவ்வாய், 10 ஜூலை, 2012

இனி யாராவது இந்தியா ஏழை நாடு என்று சொன்னால் செவிட்டில் அறையுங்கள்.

இனி யாராவது இந்தியா ஏழை நாடு என்று சொன்னால், அவனை/ளை உடனே செவிட்டில் அறையுங்கள்.

2012 மார்ச் மாதத்தில் வறுமை கோட்டை குறித்து திட்டக் கமிஸன் வெளியிட்டிருக்கும் அளவு கோள் அறிக்கையை வாசியுங்கள், வாசித்து விட்டு, வாய் நிறைய சொல்லுங்கள் இந்தியா இஸ் கிரேட்

New Delhi: Planning Commission on Monday further reduced poverty line to Rs 28.65 per capita daily consumption in cities and Rs 22.42 in rural areas, scaling down India's poverty ratio to 29.8 per cent in 2009-10, the estimates which are likely to raise the hackles of civil society.

An individual above a monthly consumption of Rs 859.6 in urban and Rs 672.8 in rural areas is not considered poor, as per the controversial formula.

Furthermore, the Plan panel has kept the poverty threshold even lower than it submitted to the Supreme Court last year, which created an outcry among the civil society.The Plan panel had said in its affidavit before the apex court that the "poverty line at June 2011 price level can be placed provisionally at Rs 965 (32 per day) per capita per month in urban areas and Rs 781 (26 per day) in rural areas".

The civil society had questioned this definition stating it was very low.

As per estimates released today, the number of poor in India has declined to 34.47 crore in 2009-10 from 40.72 crore in 2004-05 estimated on the basis of controversial Tendulkar Committee methodology.

The methodology recommended by the Committee includes spending on health and education, besides the calorie intake.

Among religious groups, Sikhs have lowest poverty ratio in rural areas at 11.9 per cent, whereas in urban areas, Christians have the lowest proportion of poor at 12.9 per cent. Poverty ratio is the highest for Muslims, at 33.9 per cent, in urban areas.

Further, poverty in rural areas declined at a faster pace than in urban cities between 2004-05 and 2009-10.


இந்த அறிக்கை நிறுபிக்க முயல்வதுதான் என்ன ? இதன் படி யாவருக்கும் அரசாங்கம் அறிவிப்பது என்னவென்றால் இந்தியாவில் ஏழைகளே இல்லை என்பதுதான்

ஆக்ஸ்ஃபோட் பல்கலை கழகத்தின் மதிப்பீட்டுபடி, உலகின் வளரும் நாடுகளில் நாளொன்றுக்கு 1.25$ வருமானத்துக்கு கீழ் உள்ளவர்கள் அனைவரும் ஏழைகள், அதாகப்பட்டது இந்திய‌ ரூபாய் மதிப்புபடி 71.75, ஆனால் நம் திட்டக்கமிஸனோ ஆக்ஸ்ஃபோட் சொல்லும் மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வ‌றுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று சொல்கிறது

இந்த மதிப்பீட்டில் அவர்கள், கல்வி, மருந்து, உடை, தங்குமிடம், எரிபொருள், மின்சாரம், குடிநீர் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை, ஆனால் ஆக்ஸ்ஃபோடி மதிப்பீட்டில் இவையாவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது, எனினும் ஆக்ஸ்ஃபோடின் மதிப்பீடு கூட இன்று செல்லுபடியாகாத, ஏனெனில் இன்றைய விலைவாசி படி நகரங்களின் வசக்க குறைந்தப்பட்சம் 2$ அல்லது 100 ரூபாய்க்கு மேல் வருமானம் தேவைப்படுகிறது

ஆனால் நம் திட்ட கமிஸனோ நம்மை அனாதைகள் போலவும் கைவிடப்பட்டவர்கள் போலவும் தெருவில் அல்லது ப்ளாட்பாரத்தில் தங்கி கொள்ளலாம் எனும் படிக்கு 28.65 ரூபாய் போதும் என்று சொல்கிறது

இதில் முக்கியமான ஒருவிடயம் அவர்கள் போக்குவரத்து செலவை கண்டு கொள்வதே இல்லை

ஆவடியில் இருந்து அம்பத்தூருக்கு செல்ல ஆகும் பேருந்து செலவு இன்று 9 ரூபாய் என்பதை திட்ட கமிஸன் கண்டு கொள்ளவே இல்லை

சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தனிவரை நாளொன்றுக்கு ரயில் கட்டணம் 20 ரூப்பாய் செலவாகிறது, இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத திட்ட கமிஸன் ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிடுகிறது, பொருளாதாரத்த வல்லுனர்கள் என்று சொல்லப்படும் மன்மோகனும், பிரணாப்பும், சிதம்பரமும் இதற்கு எந்த குறையும் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள், என்ன நடக்கிரது இந்தியாவில்

தொட‌ர்ந்து இருமுறை பிர‌த‌மாராக‌ இருந்திருக்கும் ம‌ன்மோக‌ன் அர‌சு முடித்திரும் மிக‌ பெரிய‌ ப்ராஜ‌க்ட்க‌ள் ஏதாவ‌து இருகிறாத‌ என்றால் ஊழ‌ல்க‌ள் த‌விர‌ வேறு இல்லை

http://en.wikipedia.org/wiki/Multi-dime ... erty_Index

ஆ ஊ என்றால் பாக்கை கைகாட்டி குறை சொல்லும் இவ‌ர்க‌ள், பாக் ஒரு ஸ்திர‌ த‌ன்மைய‌ற்ற‌ நாடு என்று சொல்லும் ந‌ம் வ‌ல்லுன‌ர்க‌ள், இந்த‌ ப‌ட்டிய‌லை கொஞ்ச‌ம் உற்றுப்பார்த்த‌ல் ந‌ல‌ம்

பாக்கிஸ்தானை ஒப்பிடும் (22%) போது இந்தியாவில் 41.7% பேரின் ஒரு நாளைய‌ வ‌ருமான‌ம் 1.2$ கீழ் உள்ள‌து, அதாவ‌து பார்க்கைவிட‌ ஒரு ம‌ட‌ங்கு ஏழைக‌ள் இந்தியாவில் இருக்கிறார் என்று நிரூப்பிகிற‌து இந்த‌ அறிக்கை

அதும‌ட்டும‌ல்லாது ஆக்ஸ்ஃபோட் அறிக்கையில் நிர‌ம்பியிருக்கும் இந்தியாவை குறித்த‌ அவ‌ல‌மான‌ விட‌ய‌ம் என்ன‌ வென்றால், பிகார், ச‌த்தீஸ்க‌ர், ம‌த்திய‌ பிர‌தேஸ், ஒரிசா, ராஜ‌ஸ்தான், உதிர‌பிர‌தேஸ் ம‌ற்றும் மேற்குவ‌ங்கால‌ம் போன்ற‌ மாநில‌ங்க‌ளில் இருக்கும் ஏழைகளின் எண்ணிக்கை ஆப்ரிகா நாடுக‌ளில் உள்ள் ஏழைக‌ளின் எண்ணிக்கையைவிட‌ அதிக‌ம் என்ப‌துதான்

ஆதார‌ம்

http://en.wikipedia.org/wiki/Poverty_in_India

இவ்வ‌ள‌வு அவ‌ல‌ம் நிறைந்த‌ இந்தியாவை வ‌ல்ல‌ர‌சாகும் வ‌ல்ல‌ர‌சாகும் எனும் க‌ன‌வு நிச்ச‌ய‌ம் மெய்ப்ப‌ட‌ போவ‌தில்லை, போகிற‌ போக்கை பார்த்தால் பாக் வ‌ல்ல‌ர‌சாகி நாம் வ‌யிற்றெரிச்ச‌ல்தான் ப‌டுவோம் போலிருக்கிற‌து

இந்தியா பிச்சைக்கார‌ நாடுக‌ளின் ப‌ட்டிய‌லில் சேரும் நாள் தொலைவில் இல்லை என்ப‌து இதில் இருந்து ந‌ன்கு உறுதியாகிற‌து


 

திங்கள், 9 ஜூலை, 2012

காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும்

உன்னுளிருந்து
யோர்தானென‌
பீறிட்டு வெளிப்பரவிய‌ நதியில்
மூழ்கியெழுந்தேன்

அப்பொழுது தன் வானத்தை திறந்து
காதல் சொன்னது
இவளே உன் அன்புக்குரியவள்
இவளை பின் தொடந்து கைகொள்
நித்ய வாழ்வை அடைவாய்

------------------------------------------------------------------

ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..

காமக் கிழத்தியான ஸ்டெஃபி கிராஃப்
என் மூத்தோர்களுக்கு
ஸ்டெஃபி கிராஃபை மிகவும் பிடிக்கும்
அவளின் ஒரு ஆட்டத்தையும்
அவர்கள் தவறவிட்டதில்லை

அவளின் தொடர் வெற்றிகளைப் பற்றி
பேசிய தருணத்திலும்
அவள் பந்தை அடிக்கும் லாவகத்தைப் பற்றி
வர்ணித்த பொழுதிலும்
அவளின் அழகைப் பற்றி
பேசவும் அவர்கள் மறுத்ததில்லை

ஸ்டெஃபியிடம் அவர்களுக்கிருந்த‌ ப்ரியம்
அவளின் ஆட்டத்திறன் மீதான
மரியாதையென எண்ணியிருந்தேன்
பந்தையடிக்க ஓடும் சமயத்தில்
ஆடும் அவளின் அங்கங்களிலும்
வெளிப்படும் உள்ளாடையிலும்
தம் வக்கிரத்தின் நெருப்பை
வடித்துக் கொண்டிருந்தார்கள்
என்பதை அறியும் கணம்வரை

இப்போதெல்லாம் யாருடனும் அமர்ந்து
மங்கையர் ஆட்டம் பார்க்கேவே பதட்டமாக இருக்கிறது
என்னிலிருந்து வழியும் வக்கிரத்தின் துளிகளையும்
அவர்கள் அடையாளம் கண்டுவிட கூடுமோவென‌

ஞாயிறு, 8 ஜூலை, 2012

தலைப்பற்ற கவிதை
திறந்து உள்ளே
நுழைய முயலுகையில்
இழுத்து சாத்துகிறாய் மனதை

எல்லயற்ற மனதுக்கு எல்லை வகுகிறாய்
சுற்றுச்சுவர் எழுப்புகிறாய்
கதவு வைக்கிறாய்

யாரும் தாண்டி உள்வந்துவிடும்
சாத்தியங்கள் உணரும் தருணத்தில்
பலவீனங்களை கண்டறிய
பலகோண பரிசீலனை செய்கிறாய்
கூரையீட்டு மூட முடிவெடுத்து
கனத்த கம்பிகள் மேல் கலவை படர்த்தி
தடித்த மேல்தளம் அமைக்கிறாய்

தனித்த வெற்றறையின் புழுக்கத்தில்
உள்ளிருக்க இயலாமல்
கதவை திறந்து
அகமும் புறமும் வருவது போவதுமாய் இருக்கிறாய்

மிதமிஞ்சிய தனிமையின் கணங்களில்
தட்டப்படாத கதவுகளை திறந்து
யாரும் காத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாய்

யாரும் இல்லாததால் தொற்றிக் கொள்ளும் சோர்வில்
தொய்ந்து உள் திரும்புகிறாய்
யாரும் இருந்திருந்தால் தொற்றிக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியென திட்டவட்டமாய் உரைக்கிறாய்

சுமக்க முடியாத உனது
தனித்த அறையை தூக்கி கொண்டு
ஊரூராய் போகிறாய்
கோவில் கோவிலாய் திரிகிறாய்
ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் குருஜி சொன்ன‌
அமுத மொழிகளின் உபயத்தில்
சுவரை கொஞ்சம் பேர்த்து
குளிர்சாதனம் பூட்டுகிறாய்
வெளிப்புறம் கேமிராக்கள் பொருத்தி
கணினி மூலம் கண்காணித்தவாறு
உட்புறமே அமர்த்து கொள்கிறாய்

வெளியே உன்னை யாரும் பார்த்ததாக‌
சொல்லுவதே இல்லை

வியாழன், 5 ஜூலை, 2012

வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது


வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது

அது சூரியன் தன் எல்லா கிரணங்களையும்
சிறுக சிறுக பின்வாங்கிக் கொண்டிருத்தலை
அறிவிக்கிறது

இந்த நகரத்தின் எல்லா மூலைகளிலும்
இந்த மலைகளின் பின்புறத்திலும்
ஆளில்லாத அடுக்கக வீடுகளிலும்
நாள் பூராவும் பதுங்கியிருந்த குளிர்
ஒரு பாம்பென மெல்ல வெளிவருவதை
எனதறை மின்விசிறி உணர்த்துகிறது

இந்த நகரம் முழுக்க‌
கடைசி வெம்மையையும்
தன் வெளிச்சத்தைப் போலவே சூரியன்
வழித்தெடுத்த பின்
ஒரு உறைபனியின் வீரியத்தோடு
பரவக்கூடும் கொடுங்குளிர்

அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவே
ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஒரு சிகிரெட்டையும் கொஞ்சம் நெருப்பையும்

பலமுறை அவஸ்தைப்பட்ட பிறகும்
உங்களை போலவே
நானும் எப்போதும் சிந்திப்பதே இல்லை
சிகிரெட்டும் தீர்ந்துவிட்ட பின்னர்
எப்படி இக்குளிரை சமாளிப்பதென‌

ஞாயிறு, 1 ஜூலை, 2012

சில்லுகள் - 1


காற்றிலொரு வண்ணத்துப் பூச்சியென
பரிணமித்து
எங்கு செல்லினும்
என்னை பின் தொடர்ந்து
அருகில் அகல சிறகு பரப்பி வந்தமரும்
உன் நினைவுகள் மட்டும்

*****************************************************

கார்பரேட்/ஐடி வாழ்க்கை அல்லது வேலை


உதற இயலாத புழுதியென
உடலில் அசதியை சுமந்தவாறு
பொழுதுபூராவும் அலைந்து சோர்வுற்று
ஓய்வெடுக்க ஆயாசமாய் அமரும் தருணத்தில்
ஆசனத்தில் இருந்து
ஓடு ஓடு இன்னும் ஓடுவென
குற்றும் ஒரு முள்

***********************************************

பகட்டு செறிந்திருக்கும் இந்த நகரத்தில்
பெருகியோடு கவர்ச்சியின் பிரளயத்தில்
அடித்து செல்லப்பட்டுவிடாமல்
சிரத்தையோடு பாதுகாத்து வைத்திருக்கிறேன்
நம் காதலை

***********************************

நேற்றிந்த புல்வெளியில் நிகழ்ந்த சந்திப்பில்
நாம் சுமந்திருந்த கௌரவங்களுக்கு
எந்த பங்கமும் உண்டாகிவிடாத கவனத்தோடு
பேசிக் கொண்டிருந்துவிட்டு பிரிந்தோம்
சுமக்க முடியாமல் சுமந்திருந்த காதலை
இறுதிவரை பரிமாறி கொள்ளாமல்

**************************

இந்த புதிய அப்பார்ட்மெண்டில்
அறிமுகத்திற்கு பிந்தைய சந்திப்புகளில்
"எப்படி இருங்கீங்க ?" என கேட்கும் பக்கத்துவீட்டுக்காரருக்கு
பத்து வருடத்திற்கு முன்
நீ வழங்கிப் போன கொடுங்கசைப்பை
இன்னும் செரிக்க இயலாமல் வதையுறுவது பற்றி
தெரிந்துவிட கூடாதென்று
ஒவ்வொருமுறையும்
வெறுமனே புன்னகைத்து மட்டும் கடக்கிறேன்

திங்கள், 25 ஜூன், 2012

திடீரென முளைத்துவிடும் நதிதிடீரென முளைத்திருக்கும் இந்நதியை குறித்த
எந்த தகவலும் எந்த துப்பும் எந்த அறிதலும்
இல்லை என்னிடம்..

காற்றில் கூர்தீட்ட முயலும்
மொன்னை மடிப்புக்களில்
வெளிச்சத்தை மிளிர்த்தி ஓடும்
அதன் வனப்பு என்னை
அதன் மீது வாஞ்சையுற வைக்கிறது

நகரும் மேகங்களையும்
நெளியும் வானத்தையும்
கிழித்துள் பாய்ந்தொரு மீனென மாறிவிடும்
என் எத்தனிப்பை நடுக்கமுற‌ செய்கிறது
அதன் மர்ம ஆழம் குறித்த அச்சமென்றாலும்
நீந்துதலெனும் முடிவை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை

யாருடையது இந்நதி
யாருடைய கடலில் இது கலக்கிறது
யாரும் இதனுள் ஏற்கனவே நீந்துகிறார்களா
இது என்னுடைய நதிதானா
நான் சேர வேண்டிய கடலுக்குத்தான் போகிறதா
இனி என் நிர்வாண‌த்தை இதுதான் அறிய போகிறதா
என் முழுமையையும் இதுதான் சுவைக்கப்போகிறதா
அல்லது இதன் முழுமையை நாந்தான் சுவைக்க போகிறேனா
என கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில்
என் கால்நுனி வரை கரையை நகர்த்தி
தன்னை விரிவு படுத்திவிட்டது இந்நதி

சில்லிடும் ஈரக்கைகளால் கால்களை சுற்றி
பொதுக்கென உள்ளிழுத்து
ஒரு மலைப்பாம்பென விழுங்கி
நகர துவங்குகிறது சிறு சலனத்தோடு
பின்னிதன் சலனமடங்கிய வேளையில்
நீரில் கரைகிற பனிக்கட்டியென‌
இதனுள் விரவ ஆரம்பிக்கிறேன்
பிறகு இது என்னுடையதும்
நான் இதனுடையதுமாய் மாறிவிட்ட போதில்
காயாத தன்னீர மணலை என் கைகளில் கொடுத்து
வற்றிவிட்டது இந்நதி

இதே போன்ற நதியின்
ஒரு கரையில்
நீங்களும் கூட நடந்து கொண்டிருக்கலாம்
காயாத ஈர மணலை கைகளில் ஏந்தியவாறு..

ஒவ்வொருவருக்கும் எங்னேனும்
வாய்க்க பெறுகிறது இதுபோலொரு நதி
பல புதிர்க‌ளுடன்
வற்றுவதற்காக‌வே அல்லது
பெருக்கெடுப்பதற்காகவே

வெள்ளி, 22 ஜூன், 2012

இந்த நகரத்தின் முகமூடி அணிந்த அழகான பெண்கள்

வெயிலில் உருகாத வெண்ணை சிலைகளை போன்று உலா வரும் இந்த நகரத்தின் பெண்கள் யாவரும், பெரும்பாலும் டாப்ஸும், லெகின்ஸுமே அணிந்தவ‌ர்களாக இருக்கிறார்கள்

பொட்டில்லாத நெற்றியும், நேர்த்தி செய்து கொண்ட புருவமும், அஞ்சனமிட்ட கண்களும், ப்ளீச் செய்து கொண்ட வதனமும், உறையணிந்து செருப்பிட்ட கால்களும், மெகந்தி வரைந்த கைகளும் சிறிது நேரமேனும் உங்களை ஈர்க்காமல் இருக்க வாய்ப்பே இல்லை

பரப்பரப்பான காலையில் வாகனங்கள் செறிந்த சாலையில் இறங்கி நீங்கள் நடக்க முற்படுகையில், புத்தேளுலகுக்கு பெயர்ந்துவிட்டதை போலவும், இறுகியவுடை யணிந்த மங்கையரை காணும் போது தொன்சிற்பங்கள் நிறைந்த குகையொன்றில் நுழைந்துவிட்டதை போலவும் உணர்வு கொள்வீர்கள்

ஹரப்பா மொஹாஞ்சதாரா உருவாவதற்கு காரணமானவர்கள் இந்த நகரத்தின் மங்கையார்களாகவும் இருந்திருக்க கூடும் என்று நீங்கள் யோசிக்கமல் இருக்க மாட்டீர்கள்

இருசக்கர வாகணத்தில் இணையோடு நெருக்கமாக அமர்ந்து செல்வதையும், நெரிசலான பொதுவாகணங்களில் பிற ஆணகளுடன் சகஜமாய் அமர்ந்து பயணிப்பதையும், கூட்டமாய் ஆண்கள் நின்று புகையூதும் தேந்நீர்க்கடைகளில் வெகு சாதரணமாய் தனித்து நின்று தேந்நீர் அருந்துவதையும் பார்க்கையில், பால்மேனி பாவையரின் பக்குவமும், மனமுதிர்ச்சியும், ஆணுக்கு பெண் சமம் என்பதை அழுத்தமாய் செயல்படுத்தும் விதமும், முற்போக்கும், நிமிர்ந்த நன்னடையும் உங்களுக்கு வியப்பை தோற்றுவிக்கமல் இருக்காது

எழிலியர் அலையும் இந்த நகரத்தில் ஸேர் ஆட்டோக்கள் கக்கும் கார்பன் தடித்த டீசல் புகையில் இருந்து மூர்ச்சையாகமல் இருக்க நீங்கள் பழகி கொள்ள‌ வேண்டும்

தாரைவிட கருப்பான அதன் புகை உங்களின் ஆடைகளில் தன்னை நிரந்தரமாய் ஒட்டிவைப்ப‌தையும், அதன் வாசத்தை நீங்கள் வீட்டுக்கும் சுமந்து சென்று பிறரோடு பகிர்ந்து கொள்வதையும் தினசரியானதாய் பழகி கொண்டால், இந்த நகரத்தில் வாழ நீங்கள் தகுதி உடையவராகிவிடுகுறீர்கள்

சொல்ல மறந்துவிட்டேன், இந்த நகரத்தின் ஆட்டோகளை மட்டும் வாடகைக்கு எடுத்துவிடாதீர்கள், அதன் கட்டணம் சொந்தமாக‌ ஆட்டோ வாங்குவதற்கு ஆகும் செலவைவிட ஒரு பங்கு அதிகமாகும்

இந்த நகரத்துக்கு வந்த புதிதில் நிகழ்ந்த ஒரு சம்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்னை போன்ற கல்யாணமாகாத இளையஞர்களுக்கு அது சுவாரஸ்யமற்றதாகவும், வேதனை அளிப்பதாகவும், தம் எதிர்ப்பையும் கண்டிப்பையும் மிக வன்மையாக பதிவு செய்ய அவசியமுடையதாகவும் இருக்கலாம்

இந்த நகரத்தில் இஸ்லாமிய தொகை அதிகம் என்று நான் உத்தேசித்திருந்தேன். ஆனால் என் உத்தேசம் தவறு என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறேன் ( அட நிஜமாதாங்க, நம்புங்க) என்பதையும் புரிய வைத்தது

ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த பொழுதில்,

நான்: இந்த நகரத்தில் இஸ்லாமியர்கள் தொகை அதிகமோ ??

அவர் : இல்லையே, ஏன் அப்படி கேட்குறீங்க ??

நான் : இங்க பெரும்பாலான பெண்கள் முக்காடிட்டு முகத்தை மறைச்சுக்கிறாங்களே, அதான் கேட்டேன்

அவர் : ஹா ஹா ஹா ஹ்ஹ ஹாஹ்ஹா

நான் : ????? ஏன் சிரிக்கிறீங்க ???

அவர் : அட பாவி நீ இவ்வளவு அப்பாவியா, இந்த ஊர்ல மாசு ரொம்ப ஜாஸ்தி அதான் வெளிய வரும் போது பொண்ணுங்க முகத்தை மூடிக்கிறாங்க, ஆம சில ஆம்பிளங்களும் முகத்தை மூடிக்கிறத நீ பார்க்கலயா ???

நான் : யோவ், அவங்யளலாம் யாருயா கவனிச்சா ? அது மட்டுமில்லம அவங்ய முகத்த பொத்துறத பத்திலாம் யாரு கவலப்பட்டடா!!!!

இப்படியாக‌ இந்த நகரத்தின் அழகான பெண்களை முகத்தை மூடி மறைக்க வைக்கும் மாசால் பாதிக்கப்டுவது என்னவோ என்னை போன்ற இளைஞர்கள் தான், ஆமாம், அவர்களின் மதி பொழியும் முகத்தை காணாமல் என்னை போறோர் மன உலைச்சலைக்கு உள்ளாவதையும், ஆழ்ந்த வேதனை அடைவதையும், மிக பெரிய ஏமாற்றத்தில் வீழ்வ‌தையும் இந்த சமூகம் கருத்தில் கொள்ளுவதே இல்லை

மலைக‌ளை வெடிக‌ளால் நுணுக்கி, ம‌ர‌ங்க‌ளை வெட்டி ப‌சுமையை கொன்று, புறாக்களையும், மைனாக்க‌ளையும், கிளிக‌ளையும், குருவிக‌ளையும், குயில்க‌ளையும், அட‌ காக்கைக‌ளை கூட‌ விர‌ட்டி அடித்து, பெரிய பெரிய கட்டடங்களை நிரப்பி, அத்துமீறி எந்த திசையிலும் தன் கூரிய கால்களோடு வெயில் மேயும் வெம்மையுடையதகாவும், பறவைகளே இல்லாததாகவும் மாறிவிட்ட இந்த நகரத்தை, பாவையரும் பால்முகத்தை மறைத்துக் கொண்டு உலவினால் ஒழிய வாழுதற்கு சாத்தியமும் எளிதுமற்ற‌தாக மாற்றிவிட்டீர்கள்
நாளை வீடுக்குள்ளும் ஒருத்தரை ஒருத்தர் காணமல் வாழுதற்கு பழகி கொண்டாலன்றி வாழுதல் எளிதல்ல என்னும் நிலையை உருவாக்குவீர்கள்

கார்பன் புகை அடர்ந்து எப்போதும் இரவு போலவே காட்சியளிக்கும் நகரத்தில் வாழும் சாபத்தை எதிர்கால சந்ததிக்கு அளிக்கவும் முடிவு கட்டிவிட்டீர்கள்
துப்பட்டா முகில் மறைக்காத சந்திர வதனத்தை காணுவதற்கேனும் இந்த நகரத்துக்காக ஏதாவது செய்யவேணும், எஞ்சோட்டு தோழர்களே..