வியாழன், 3 மார்ச், 2011

என்னோடு நான்

மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

புதன், 2 மார்ச், 2011

சங்கீதங்கள் - 2


காதல்


கோடி தேவதைகள்
கூடி காக்கும்
தெய்வநரகத்தின் கருவில் இருந்து
உயிர்த்த புனித பாவம்..

யுகயுகங்களுக்கு முன்
ஊழிக்காலம் பிறப்பதற்கு
முந்தைய அந்திம பொழுதில்
ஆத்தீக சாத்தான்களின்
தெய்வீககரங்களால்
அருளப்பட்ட தேவசாபம்..

ஆதாமின் விழியிலிருந்து
ஏவாளின் மனதில் உதிர்ந்த
தூய வெறி
வெட்கப்பொறி

இறைவா!
அந்த வெறியை என்னிலும் விதை
உம் பரிசுத்த நாவினால்
தேவசாபத்தை எனக்கும் தருக
புனித பாவத்தில் மூழ்கி
புணர்ந்து உம்முடன் கலக்க
தெய்வநரகத்தின் விந்தை எனிலும்
சிந்துவீராக..

செவ்வாய், 1 மார்ச், 2011

சங்கீதங்கள் - 1


பூக்களின் மகரந்த சேர்க்கை போல்
நிகழ்ந்தது நம் புணர்ச்சி..

இருளின் அடி பாதாளத்தில்
சரிந்த வெளிச்ச துகளாய்
தூவினாய் உன் அன்பை என்னில்..

மயக்க ரகசியங்களை
மறைக்கும் திரைச்சீலையை கிழித்து
உனை நோக்கிய
பயண திசையின்
பாதையை தெளிவித்தாய்..


ஐப்பொருள் கடந்த
மெய்ப்பொருளே
நீ ஈந்த அன்பையும் தெளிவையும்
யார்க்கும் கொடுக்க
அருள்க எனக்கு..