சனி, 5 ஜனவரி, 2013

நிலவுஎவ்வளவு முயன்றும்
துல்லியமாய் வரைய‌
இயன்றதில்லை அதையும்
உன்னை போலவே

ஒரு
கவிதையின் வர்ணனையைப் போலவோ
கதையின் ஒரு காட்சியை போலவோ
அது ரசனைக்குரியதாய் இருக்கவில்லை
உன்னைவிடவும்

முழுவட்டநாளில்
வெண்மஞ்சளொளியோடு
அது மிக பிரகாசித்தாலும்
உன் குழலுதிர்த்த ஒரு மல்லிகை பூவுக்கு
ஒப்பாவதில்லை

வனாந்திரம் வனாந்திரமாய்
ஊர் ஊராய் அலைந்து தேய்ந்து
உன் காதின் ஒற்றைக் கம்மல் போலிருக்கும்
கடைசி பிறை தினத்தில்
அதை கொஞ்சம் ரசிக்காமல் இருந்ததில்லை

தன்னுடைய ஏதாவது
ஒரு ரூபத்தால் அது
உன்னை எனக்கு
ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறது

சட்டைப் பையில் மறையும்
நாணயமென‌
அது முழுமுற்றாயாய் மறையும் நாளில்
கவியும் இருளில்
ஊற்றி வைக்கிறது
ஜீரணிபதற்கு சாத்தியமற்ற‌
நீயில்லாத‌ வெறுமையின்
கொடுங்கசப்பை