திங்கள், 24 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை
அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்

பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன

அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு

பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன

ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்

போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..

அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

வியாழன், 20 ஜனவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை
ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ

செவ்வாய், 18 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

மிகைகளால் மீதங்களால் நிரம்பிக் கிடந்தாய்
மிகைகளால் மீதங்களால் நிரம்ப நிறைந்தாய்
நிறைந்தாய் நிறைந்தாய் நிறைந்தாய்
இரைந்தாய் இரைந்தாய் இரைந்தாய்
இரைந்து இரைந்து இரைந்து போன வழியில்
இரந்து இறந்து இரைந்திருந்தாய்

சுரந்தாய் கரந்தாய் கரைந்தாய்
கரைந்து கரைந்து உறைந்தாய்
உறைந்து உறைந்து கரைந்தாய்
உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து மிகைந்தாய்
மிகைந்து மிகைந்து குறைந்தாய்
மறைந்தாய்
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்