செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நெய்தல்
உன் கதுப்பை
தோள்களில் சாய்த்திருந்தாய்

உன் கன்னம் வருடி
உச்சந்தலை மோந்த பொழுதில்
நாணம் முகத்தில் விரவ‌
மேலே விரித்த விழிகளால்
எனைப்பார்த்தவாறு
நெருக்கமானாய்

பொட்டற்ற உன் நெற்றியில்
முத்தப் பொட்டிட்ட தருணத்தில்
சின்ன இதழ்கள் மெல்ல நெகிழ்ந்து
சிந்திய தாபங்களை
கைகளில் ஏந்தி
உன்னை இறுக அணைத்துக் கொண்டேன்

மீண்டும் என் தோள்களில்
சாய்ந்து
கோலவிரல்களால் என் மேல்
கோலம் போட‌
உன் பூமுகம் அள்ளி
என்ன என்றேன்

தீரா காதலின்
ஏக்க உணர்வெல்லாம்
குழைந்த மென்குரலில்
"எனக்கு உன் கூட‌
எப்பவும் இருக்கனும்"
என்றாய்

அந்த வார்த்தைகளில்
மேலும் ததும்பி
மீதமின்றி வழிந்துவிட்ட
என் முழுமையையும் திரட்டி
உன் இதழ் குளத்தில்
பாய்ந்து மீனானேன்
கிரங்கிய உன் விழிகளில்
நெளிய துவங்கின‌
வட்ட வட்ட அலைகள்

சனி, 8 செப்டம்பர், 2012

சுவை


என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை

தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன‌

பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது

மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய் மாறி
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

கூட்டித்தள்ளிவிட முடிகிற‌
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல‌
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.

யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!

துரோகம் செய்த ஒருவனை
 


உனக்கு துரோகமிளைத்தவனை
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில்
அவன் அறைக்குள் பெற்றோலூற்றி
நெருப்பு வைக்கலாம்

நல்லவிதமாய் உறவாடி
நயவஞ்சக காய்களை நகர்த்தி
வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்

ஊர்பூராவும் அவனை பற்றி
அவதூறு பரப்பலாம்

பார்க்கிற இடத்திலெல்லாம்
பாளாரென அவனை அறைய சீறிபாயலாம்

விடுதியொன்றில் எதேச்சையாய்
சந்திக்க நேர்கையில்
முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்

கூலிப்படை கொண்டு
குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்

அவன் குடும்பத்தில்
உட்பூசல் உண்டாக்கி நிலைகுலைக்கலாம்

காலம் முழுக்க அவ்ன் செய்ததை
எண்ணி எண்ணி
சபித்து கொண்டே இருக்கலாம்

ஒவ்வொரு பொழுதும்
அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்

என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய‌ போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...

உன் காதல் கடிதங்களில்


உன் காதல் கடிதங்களில் இருந்து
விரிகிற எனக்கான புல்வெளியால்
நிரம்பிவிடுகிறது எனது அறை

சாயம் போகாத
ஒரு மயிலின் நடனத்தில் துளிர்க்கும்
மழைநாளின் சில்லிப்பையும்
தலைவருடலுக்கு ஏங்கும்
நாய்க்குட்டியின் குழைவையும்
உண்டாக்கும் உன் வார்த்தைகள்
உறிஞ்சி குடிக்கின்றன
என் சிறிது நேரத் தனிமையை...

அழுத்தமாய் நீ பதித்தனுப்பும்
உன் வண்ண இதழ்களின் சுவட்டிலிருந்து ஊறும்
எச்சில் காயாத முத்தங்களில்
ஈரம் ஆறாமல் இருக்கிறது
யுகயுகங்களாய் தணியாத உன் பேரன்பு..

புரியாத கவிதையை போல நீயும்


Wallpapers Sad Boy Pencil Sketches Mobile Black White And Widescreen   1024x768புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்

சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன

கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது

உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ

புரியாமலும்.....

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அவ‌ன்

தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்

த‌ன்னுடைய‌ அதிந‌வீன‌ பொய்க‌ளால்
சாதுர்ய‌மாய் என்னையும் அந்த‌ க‌ற்ப‌னை உல‌க‌த்துக்கே
இட்டுச் சென்று
அத‌னை உண்மை என்று ந‌ம்ப‌வைத்துவிடுகிறான்

பிற‌கொரு த‌ருண‌த்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகச‌க் க‌தைக‌ளை
அவ‌ன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுக‌ல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க‌ ‌
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்

அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த‌ விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது

அவ‌ன் க‌ற்ப‌னை உல‌க‌த்தில் கூட‌
யாரையும்
ச‌ந்தேக‌த்தோடும்
அவ‌ந‌ம்பிக்கையோடும்
குழ‌ப்ப‌த்தோடும்
ப‌ய‌த்தோடும்
பொய்க‌ளோடுமே அணுகுகிறான்

அவ‌ன் த‌ன் ஒவ்வொரு மாந்த‌ரையும்
அதி தீவிர‌ க‌ண்காணிபபுக் குட்ப‌டுத்தி வைத்திருக்கிறான்

சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவ‌ன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்‌
என‌ எனக்கு தெரியும்

ஆதலாலே
தான் பொய்க‌ளிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவ‌னின் ஸ்திரமான ந‌ம்பிக்கையை
நானும் திட‌ப்ப‌டுத்திக் கொண்டே இருக்கிறேன்

நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே‌ பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்க‌ள்

விண்மீன்கள்நிதம்நிதம் வானை
நிமிர்ந்திவள் பார்த்தால்
நீங்காமல் பதிந்துவிட்ட
நீள்விழி சுவடுகள்

பாவையர் மேனியை
பகல்விளக்கில் சுட்டதற்கு
மாலையில் விம்மிடும்
மேல்கருத்த வானம்


விண்ணவள் ஒருத்தியை
விண்ணவன் நோக்கையில்
மின்னவள் விழிகளை
மீறிவிழுந்த நாணத்துளிகள்

ரதியவள் ஆடிடும்
ரம்மிய அழகினில்
மதிகெட்ட வானவர்
வார்த்திட்ட ஜொள்ளுகள்

அங்கொரு ஆண்டவன்
அந்திரமாக மனைவியை
அணைத்திடும் முன்பொழுதில்
அவிழ்த்திட்ட ஆபரணங்கள்

இங்கொரு ஆண்டவன்
இன்பத்து பாலிலே
திளைத்திட்ட தருணத்தில்
திமிறிய விரகங்கள்

விண்ணக வீதியில்
விளையாட்டு மகிழ்வினில்
சின்னஞ் சிறியவர்
சிந்திய சிரிப்புக்கள்

வாலிபை ஒருத்தி
வடிவாய் உருட்டிய சோழிகள்
தோழி ஒருத்தி
தொலைய வீசிய வட்டாங்காய்கள்

கற்பகதருவிலே தேவப்பறவைகள்
கட்டிய கூடுகள்
காமதேனுவை கறக்கையில்
சிதறிய காம்பு தூறல்கள்

நாங்கள்


இருவர் பிரிந்து போனார்கள்

நாங்கள் பேசத்துவ‌ங்கினோம்
பேசினோம் பேசினோம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அவர்களை குறித்தே
பேசினோம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் விவாதம் நடத்தினோம்

அவர்களைவிட நாங்கள் நியாயம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கோவம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் காரணங்கள் அதிகம் சொன்னோம்

அவர்களைவிட நாங்கள் நிகழ்வுகளை ஆராய்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் தூரோகத்தை பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கேள்விகள் கேட்டோம்

அவர்களைவிட நாங்கள் வழக்கை விசாரித்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்ப்பை ஏற்றினோம்

அவர்களைவிட நாங்கள் அவர்களை பிந்தொடர்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் ஆனந்தம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் தூரம் பிரிந்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்மானமாய் தீர்க்கமாய் திண்ணமாய் இருந்தோம்

அவர்களை விட நாங்கள் தாயாரகவே இருக்கவில்லை

ஒருநாள் அவர்கள் இணைந்துவிட்டார்கள்

நாங்கள் அவர்களை இணைந்தது குறித்து பேச துவங்கிவிட்டோம்

காதல் நெகிழி
இப்படி அழகாய்
உதட்டை பிதுக்கி சொல்வாயானால்
எத்தனை முறையானாலும்
நிராகரிக்கப்பட தயார் என்று
நீ சொன்னத் தருணத்தில்
உன் காதலின் துளி
என்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது

மதுவில் மித‌க்கும்
ப‌னிக்க‌ட்டியென‌
க‌ரைய‌ துவ‌ங்கிவிட்டேன்
உன் காத‌லில்

நீ ர‌சிப்ப‌த‌ற்காக‌வே
என்னை அழ‌காய்
வைத்துக் கொள்கிறேன்

நீ பொறாமைப்ப‌ட‌வ‌த‌ற்காக‌வே
பிற‌ ஆண்க‌ளுட‌ன் பேசுகிறேன்

மீண்டும்
உன் காத‌லை நீ சொல்வ‌த‌ற்காக‌வே
உன்னோடான‌ த‌னிமையான‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளை
உருவாக்குகிறேன்

நீ என்னை பார்க்காமல் போன‌
பொழுதுக்காக எல்லாம் உன்னிடம்
சண்டையிட காத்திருக்கிறேன்

காதல் என்னை மீண்டும்
சிறுப்பிள்ளையாக்கிவிட்டது

தன் கிறுக்குதனங்களை எல்லாம்
என்னை செய்ய வைத்து
வேடிக்கைப்பார்க்கிறது

புரிந்து கொள்ள‌டா
உன் அண்மையும்
தொலைவும்
என‌க்கு ப‌த‌ட்ட‌மான‌தாக‌வே இருக்கிற‌து...நெகிழி=பிளாஸ்டிக்

புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..
மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..

ஒரு கடைக்காரனிடம் விலை பேசுவதில் இருந்து
பக்கோடாவுக்கு கொஞ்சம் கொசுறு வாங்குவது வரை
சாமர்த்தியம் போதாதவனாகவே பார்க்க‌ப்ப‌டுகிறேன்

இந்த அவசர யுகத்தில்
அவனவனுக்கு வேண்டியதை அவனவனும்
அவனவனை பற்றி அவனவனும்
சுயநலமாய் யோசித்து பூர்த்தி செய்து கொள்ளும் நிலையிலும்
அடுத்தவனை மட்டம்தட்ட அமையும்
சந்தர்ப்பத்தை தவறவிடுவதே இல்லை

"இத‌ற்கு போயா இவ்வ‌ள‌வு விலை கொடுத்த ?‌"
என்கிறார்கள்
மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..

மனவளர்ச்சியற்றவனின் கவிதைபறவைகளை பற்றி எழுதலாமென்று இருக்கிறேன் இக்கட்டுரையில். சிங்கங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆண் சிங்கம் என்றால் இன்னும் அதிக விருப்பம், கம்பீரமான அதன் கர்ஜனை, இறுமாந்த அதன் நடை, கர்வமான அதன் பார்வை, பஞ்சு போன்ற அதன் பிடறி என ஆண் சிங்கத்தின் அழகை ரசிப்பதில் அலாதியான பிரியம் எனக்கு..

அந்த யானை அவனுக்குள்
நுழைந்த பிறகு
மிக ஆக்ரோசமாய் அவன் மாறி போனான்,
அத்தனை பொருட்களையும்
மிக வெறியோடு கெடாசினான்
குலை நடுங்குகிற அளவிற்கு பிளிறி
பெரும் சத்தமெழுப்பி எல்லோரையும்
அச்சரமாய் ஆக்கினான்,
அவன் சுற்றமே மிரண்டலறி
பயத்தில் பதுங்கி இருந்தது,
திடீரென பூத்த ஒரு பூவென்றின்
மடியில் படுத்து அந்த யானை தன்
மதத்தை நீக்கி கொண்ட போது
அவன் சுற்றும்
நிலா வெளிச்சத்தில் அடர்த்தி இழந்த
இருளில் மின்னும் நட்சத்திரங்களை
ஏந்தி கொள்ளவதை போல் விரிந்திருக்கும்
மரங்களின் பரப்பை போல
ரம்மியமான பிராந்தியமாக மாறி இருந்தது

இக்கதையில் மதயானையையும் பூவையும் பயன் படுத்திக் கொள்ள அனுமதி கேட்ட தருணத்தில், யானை ஏற்கனவே கதைக்குள் இடம்பெயர்ந்திருந்தது, புலியின் பாதங்களும், மலைப்பாம்பை போன்ற துதிக் கையும், ஓநாயின் தலையும், நரியின் பார்வையும் கொண்ட அதனை யானை என்று என்னால் சொல்லயிலவில்லை, பூவிற்கும் அந்த யானைக்கும் உள்ள பிணைப்பை பற்றி எழுதவே இக்கதையை ஆரம்பிக்கிறேன் நான், இல்லை ஆரம்பிக்கிறான் அவன் இல்லை இல்லை ஆரம்பிக்கிறீர்கள் நீங்கள்.

ம்..
சரி சொல்லுங்கள்
எப்படி இந்த கதையை முடிக்க போகுறீர்கள்

பைத்தியம் பைத்தியம்

இது கதையல்ல கவிதை

நீ தான் பைத்தியம்

இது கட்டுரை

பைத்தியம்........................................... பைத்தியம்......................................... பைத்தியம்...................................................... பைத்தியம்......................................................... பைத்தியம்...................... பைத்தியம்.................................................. பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் எல்லாரும் பைத்தியம்

எனக்காக இல்லாவிடினும் யார் யாருக்காகவோ
வளர்த்த ஆடுகளும் கோழிகளும்
வயதாகி பேரன் பேத்தி எடுத்திருக்குமோ
எங்காவது ஒரு சந்தையில் காசாகவோ ?
ஏதாவது ஒரு விருந்தில் கறியாகவோ
ஆக்கப்பட்டிருக்குமோ ?

வளர்த்த செடிகளுக்கும் கொடிகளுக்கும்
என் ஸ்பரிசமும் வாசமும்
நினைவிருக்குமோ ? இருக்காதோ ?
இல்லை அவைகளே
தடமின்றி சுவாசமிழந்திருக்குமோ ?

என் முகத்தோடான பரிச்சயம்
அண்டைவீட்டுக்காரர்களுக்கு இருக்குமோ ?
அல்லது
ஐயத்தோடான பார்வையை
என் புன்னகைக்கு பதிலளிபார்களோ ?

கூரைவீடெல்லாம்
காரைவீடாகி இருக்கிறது..

பிழைப்புக்கு வெளியூர்
பெயர்ந்தவர்களின் வீடுகள் சில
பாழடைந்து கிடக்கிறது..

ஒரு புறம் தென்னையும்
மறுப்புற வயலும் அணி வகுத்த
ஒற்றையடிப்பாதை
தார்ப்பாதையாகி
தென்னையும் வயலும் இல்லாத
வெயில் பாதையாகி இருக்கின்றன..

வயலில் வெள்ளை மொட்டுக்களாய்
பூக்கிற கொக்குகள் எல்லாம்
எந்த திசையில் திரிகின்றனவோ ?
அவைகளுக்கு இறையாகிற
தவளைகளும் மீன்களும்
எங்கு ஜீவிக்கின்றனவோ ?

என்னத்தான் வெளிநாடு சென்று வந்தாலும்
'பஞ்சம் பிழைக்க' என்பதுதான்
சரியாக பொருந்துகிறது..

போனவையோடு போனவை பல
வந்த போதும் இழந்திருப்பவை பல
எனினும்
மீண்டும் போக வேண்டும் என்பதில் தான்
கவனமாக இருக்கிறது புத்தி..

எனக்காக இல்லாவிடினும்
யார் யாருக்காகவோ

ம‌க்க‌ட்பேறுஇருட்டான ஒரு பாதையில் இருந்து
தப்பித்து வெளியேறும்
பயத்தோடே இருக்கிறது
இன்றைய கலவியெல்லாம்

பதினைந்தாண்டாக‌
குழந்தை இல்லாததின் பழியை
இம்முறையேனும் அகற்றவேண்டும்
எனும் முனைப்போடே நிகழ்வதனால்
பரவ‌சத்தை காட்டிலும் பெரும்பாலும்
பதட்டமே பெருக்கெடுக்கிறது

பாலியல் புத்தகமனைத்தும்
பக்கம் மிஞ்சாமல் கற்று
ஊழியல் பார்த்து
உதிரம் கழியும் விடாய் பார்த்து
காமம் பழகி
அடுத்தமுறை அடிவயிறு பிடித்து
அவள் அமரும் போது
சவ ஊர்வலம் போன தெருவில் வீசுகிற‌
மரணம் வாசமே பரவுகிறது
வீடு முழுக்க‌

காதலுமில்லாமல்
காமமுமில்லாமல்
கட்டாயத்திற்காக‌
சுவாரஸ்யமற்று மாத்திரையின் உந்துதலால் நிகழும் விரவுதல்
வெறுமையானதாகவும்
விரக்தியானதாகவும்
தோல்வியை நினைந்த அச்சகரமானதாகவும்
தன் பிறப்புறுப்பு தெரிவதறியாமல்
தாந்தோன்றியாய் அலையும்
மனபிறழ்ந்தவனின் நீக்க முடியாத‌
மன அழுத்தை பாய்ச்சுவதாகவும்
இருக்கிறது

குழந்தையின்மை இந்த துக்கம்
ஒவ்வொரு பிள்ளையில்லாதவருக்கும்
பகலை காட்டிலும்
இரவே பீதியுண்டாக்குவதாய் இருக்கிறது
தனிமையே அமைந்துவிட கூடாதென்னும்
பிராத்தனை உடையதாகவும்
கலவியே நிகழ்ந்துவிட கூடாதென்னும்
பயமுடையதாகவும் இருக்கிறது

காமம் பழகுதல்
மன அழுத்தத்தை குறைக்குமெனும்
விஞ்ஞான கூற்று
குழைந்தையற்றோற்கு பொருந்துவதே இல்லை
காமம் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது..

விழாக்க‌ளும்
ச‌ந்திப்புக்க‌ளும்
தெரிந்தே ம‌ற‌க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தாக இருக்கின்ற‌ன‌
"எத்தனை குழ‌ந்தைக‌ள் ? அல்ல‌து
இன்னும் பிள்ளை இல்லையா ? "
எனும் கேள்விக்களுக்காகவே