வெள்ளி, 23 அக்டோபர், 2009

இந்தா பிடி உன் தாலி

ஆகிவிட்டது
எட்டாண்டுகள்
என் வாழ்வின்
எல்லா வண்ணங்களிலும் கரிப்படிந்து..

உன் அழைப்புகளுக்கு
மறுப்பின்றி இசைய வேண்டிய
அடிமையாகத்தான் பாவிக்கிறாய்
என்னை..

அத்தருணங்களில்
அருவருப்பூட்டும் உன் செயல்களை
எதிர்க்கும் துணிச்சலின்றி
உன் வக்கிர புரிவுகளை
சகிக்கிறேன்..

மிதம் மீறும் உன்
அருவருப்பு செய்கைகளை
தடைசெய்யும் தருணங்களில்
தரம் கெட்ட வார்த்தைகளால்தான்
என்னை தாக்குவாய் நீ..

என் பயத்தையும்
பலவீனத்தையும் நன்கு
ஆளத்தெரிந்த உன்னை
கையாளும் திறந்தான்
கைவரவில்லை எனக்கு..

உன் மூர்க்கதனங்களிலும்
முரட்டுதனங்களிலும்
என் பெண்மையும் அழகும்
சிக்குண்டு சிதைந்தொழிந்ததை தவிர
உன்னோடான என் இணைவும்
எனக்கு வேறொன்றும் பெற்றுத் தரவில்லை..

உன் இருப்பிள்ளைகளுக்கு
தாயானப் பிறகும்
தணியவில்லை
உன் வக்கிரங்களும்
அருவருப்பு செய்கைகளும்..

எந்த கடவுளின்
யாதொரு பரிகாரத்தாலும்
என் இழப்புக்கு ஈடு செய்ய இயலாது..

இனி உன் அருவருப்புகளையும்
சகிக்க முடியாது..

இந்த பிடி
உன் தாலி..