புதன், 3 நவம்பர், 2010

மெய்யறிதல்
வசைச் சொற்களால் ஏசலுற்ற தருணத்திலும்
கருந்துளையாய் சொற்களை உட்செமித்தவாறு
சூன்யமாய் இருந்தான் அவன்

பிறப்பித்தவர்களே
கனவு குழந்தைகளின் கழுத்தறுத்த சமயத்திலும்
சூழல் அப்படி செய்ய வற்புறுத்தியிருக்குமென்று
மற்றவர்களுக்கு சாதகமாய் வாதிட்டு
சமாதானம் செய்து கொண்டான் தன்னை

இடஞ்சுட்டாமல் அவன் மட்டுமே
பொருளுணரும்படியான குத்தல் பேச்சுக்களில்
ரத்தம் கசித்த போதினிலும்
சுமூகமாகவே ரணவாளிகளோடு உறவாடினான்

தன்னுடைய வெளியின் அளவை
மற்ற*வர்கள் முடிவு செய்ய முயற்சித்த தறுவாயிலும்
மிக நிதானமாகவே பேச்சுக்கள் நடத்தினான்

நீண்ட கரங்கள் கன்னத்தில் அறைந்த போதிலும்
குவிந்த உதடுகள் முகத்தில் உமிழ்ந்த போதிலும்
தாக்குறுதலின்
அவமானப்படலின்
வலியினது வீரியம் கனம் அடர்த்தி ஆழம் பற்றி
அமைதியாய் ஆய்வு செய்து குறிப்பெடுத்திருந்தான்

கவிதைக்கான அருந்தருணனொன்று
கலைக்கப்பட்ட போது
கடவுளின் முகமூடியை கழட்டி வீசி
பிடேட்டரின் கோர முகத்தோடு ஊளையிட்டலறி பாய்ந்து
பெரியவர் சிறியவர் பாராமல்
யாவரின் மனதையும் பிளந்து கிழித்த தருணத்தில்தான்
அவ*னது மெய்யான முகத்தின் விகாரத்தை
அவனே காண நேர்ந்தது

திங்கள், 1 நவம்பர், 2010

இது அவனைப் பற்றியக் கதையல்ல

முன் குறிப்பு : வணக்கம், இது என் முதல் கதை, கண்டிப்பாய் நிறைய நிறைய நிறைய நிறைய குறை இருக்கும், எடுத்துச் சொல்லுங்கள், கற்றுக் கொள்வேன். கதை நல்லா இல்லை என்றாலும், ஒரு வேளை இதை நீங்கள் கதையாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தயக்கமில்லாமல் கண்டிப்பாய் சொல்லுங்கள்.


வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல் குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள் இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல் இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக் கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து கிடந்த தறுவாயில்..

அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான் அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை.

இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

அவனைப் பற்றி நினைத்தாலே அவனின் பல பெயர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது, மொன்னை பிளேடு, ரம்பம், செடி, அறுவை, தோல்வாயன், தொன தொன கிழவி இத்யாதி, இத்யாதி. இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் அவன் அதனை பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை, அதை பற்றி கவலையுற்று தன்னை மாற்றிக் கொள்ளவும் எண்ணியதில்லை. பெரும்பாலும் அவன் பேச்சுக்கள் ஒரு நிலைப்பட்டதாய் இருக்காது, அது சம்பந்தம் சம்பந்தமில்லாத களங்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும், சம்பந்தமே இல்லாத சில விடயங்களையும் சம்பந்தம் செய்யும், அப்பேர்ப்பட்ட தருணங்களில் அவனைக் கண்டு நான் வியக்காமல் இருந்ததில்லை, என்றாலும் அவன் பேச்சுக்கள் உண்டாக்குகிற அயர்ச்சி எரிச்சலோடு முகம் சுழிக்கவும் வைக்கும், நானே அவனிடம் அப்படி நடந்து கொண்டும் இருக்கிறேன்.


பேருந்து இன்னும் புறப்படவில்லை, மனதை இழுத்து செல்கிற அழகிய பெண்களைப் போல, எதிர்பாராமல் சந்திக்கிற இனிமையான மனிதர்களைப் போல, சுவையான சம்பவங்களைப் போல, மகிழ்ச்சியான தருணங்களைப் போல, மேகங்கள் வானத்தில் கூடி கூடி கலைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இந்த மேகங்களை நான் பார்த்திருக்கிறேனா ? இவை புதிய மேகங்களா ? அல்லது பழயவைகள் தானா ? என் அருகிருக்கையில் அமர்ந்திருப்பவனை போலத் தான் இந்த மேகங்களுமா, இங்கிருந்து புறப்பட்ட உடன் இதனுடனான என் தொடர்பு அறுந்துவிடுமா ?

ஓவியங்களில் அவனுக்கு மிகைந்த ஈடுபாடு உண்டு, அதுமட்டுமல்ல கைவினைப் பொருட்களும் மிக அழகழகாக செய்வான். வீட்டில் அவன் அறையின் நான்கு சுவர்களிலும் நான்குவித வண்ணப்பூச்சுக்கள் அடித்து வைத்திருக்கிறான், வித்யாச வித்யாசமான வண்ண விளக்குகள், மணி போன்ற சின்ன சின்ன விளக்குகள், இயற்கை காட்சி போன்ற நவீன ஓவியங்கள் என்று அந்த சுவர்களை மெருகேற்றியும் வைத்திருக்கிறான். அவன் வீட்டுக்கு சென்று வருகிறவர்கள், அதுவரை பழக்கமாகாத அவனைப் பார்ப்பார்கள், ஒரு கண்காட்சிக்கு வந்திருப்பதைப் போன்று உணர்வார்கள். அவனை காண அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தேன், வெளியே எங்கோ போயிருப்பதாய் சொன்னார் அவன் அப்பா..

அவனுக்காக அவன் வீட்டில் காத்திருந்தேன், சற்றைக்கு மிகைந்த நேரம் கழித்தே வந்தான், என்னை கண்டும், எதுவும் பேசுமால் வீட்டின் பின்புறமாய் சென்றான்

“அந்த தம்பி ரொம்ப நேரமா உனக்காக காத்திட்டு இருக்கு, நீ எங்க போய் சுத்திட்டு வர”

என்ற அவன் அம்மாவின் குரலையும் பொருட்படுத்தவே இல்லை..

என்ன மனுசன் டா இவன் ? இவன பார்க்கத்தானே வந்திருக்கோம், கண்டுக்காம கூட போறான் என்று அவமானமாக இருந்தது. அதற்கு மேல் அவன் வீட்டில் அமர்ந்திருக்க தன்மானம் தடுத்தது, கடுப்பாக இருந்தது, அப்படியே சொல்லாமல் கிளம்பி விடலாம் என்று தோன்றியது.

“சொல்லாமல் கிளம்பினால் அவன் வீட்டார் என்னைப் பற்றித்தான் என்ன நினைப்பார்கள் ?”

அவன் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவன் வீட்டார்கள் நல்லவிதமாய் தானே என்னிடம் நடுந்து கொண்டார்கள், உபசரித்தார்கள், அப்படி இருக்க அவர்களிடம் கூறாமல் செல்வது சரியாக இருக்குமா ?

அவன் அம்மாவை அழைத்து “ நான் கிளம்புறேன் மா” என்றேன்

அவர்களுக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும்

“ஒரு நிமிஷம் இருப்பா, அவன போய் கூட்டியாறேன்” என்று சங்கடமான முகத்தோடு சொன்னார்கள்

“நீங்க இருங்க மா, நானே போய் அவன பார்த்து சொல்லிட்டு கிளம்புறேன்”

அவர்கள் பதில் சொல்லும் முன் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தேன்

வீட்டுக்கு வரும் பொழுது கொண்டு வந்திருந்த கான்கிரிட் கட்டும் கம்பியை, கொல்லையில் இருந்த மாமரத்தில் வயிறு தட்டையான “S” போன்ற வடிவத்தில் வளைத்துக் கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன் டா”

“இரு டா, உனக்கொன்னு செய்து காட்டலாம் தான் இந்த கம்பியை வளச்சிட்டு இருக்கேன்” என விழிகளில் பெருமை பொங்க சிரித்தான்

வீட்டுக்கு வந்தவனை வா னு கூட கூப்பிடாம வந்துட்டு, எனக்கு செய்து காட்டுறேன் னு சொல்றியே “ லூசா டா நீ” என்று கேட்க தோன்றியது

ஆனால் கேட்கவில்லை.

திரும்பி பார்த்த போது என் இடது புற வரிசையில் ஜன்னலுக்கடுத்த இருக்கயில் அமர்ந்திருந்த பெண் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். பொத்தல் விழுந்த ஓடாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. ஒரு விடை பெறுதலுக்கான பேச்சாகத்தான் அது இருக்க வேண்டும், பிரிவுத் துயரில் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்று மனது பேசியது. தலை நிறைய அவள் சூடியிருக்கும் பூக்களில் இப்போது எந்த நறுமணம் வீசும் ? ஆற்றாமையின் நறுமணமா ? அழுகையின் நறுமணமா ? அவளின் நறுமணமா ? இல்லை பூவின் நறுமணமா ?

வேரோடு அறுந்துவிடுகிற பிரிவோ ? அல்லது தற்காலிகமான பிரிவோ ? அதை சொல்லுதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல, வார்த்தைகள் நனைய வழிகிற கண்ணீரில் அந்த பிரிவின் கனம் குறைந்துவிடுவதில்லை. ஒரு அழுத்தத்தை என்றுமே அது நம்முள் இருத்துகிறது, அதன் அடர்த்தி அதிகமாகும் போதெல்லம் யானையின் கால்களை கொண்டு அது நம்மை நசுக்குகிறது. அடர்த்தி குறையும் போது எறும்பின் கால்களை போல சுருங்கி மனசின் பரப்பெங்கும் ஊர்ந்து கொண்டே இருக்கிறது.

வளைத்த கம்பியை வைத்து அவன் ஒரு டைனோஸர் செய்தான், மிகத்துல்லியமாக இல்லை என்றாலும் அது டைனோஸர் போலவே இருந்தது.

“இந்த ஓவியங்களை எதை பார்த்து வரைஞ்ச டா” என்று அவன் சுவரில் இருக்கும் ஓவியங்கள் குறித்து கேட்டேன்

“இதுவா வான்காவுடையது, இணையத்தில் பார்த்தேன், பிரிண்ட் எடுத்துட்டு வந்து வரைஞ்சேன், உனக்கு வான்கா பற்றி தெரியுமா ? “

உதட்டைப் பிதுக்கினேன்

“அவரு ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட், அவரோட ஓவியங்கள் எல்லாம் வயல் வெளி காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும், வாழும் போது அவரை யாரும் கண்டுக்க கூட இல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைஞ்சுருக்கார், ஆனால் அதில் இரண்டே இரண்டுதான் அவர் வாழும் போது விற்ற, அதுவும் சொற்ப விலைக்கு, இப்ப அவர் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் 2 கோடி வரை விற்கப்படுது, கடைசி வரை அவர் கல்யாணமே பண்ணிக்கல” என்று ஒரு குறுஞ்சரித்திரத்தையே சொன்னான்

“எங்க இருந்து டா இவ்வளவு விஷயங்கள சேகரிக்கிற”

“இணையத்தில் இருந்துதான்” என்று பெருமையோடு என் வியப்பை கண்டு புன்னகைத்தான்

“டா வின் சியோட, மோனோலிஸா ஓவியம் பற்றிய ரகசியம் என்ன னு தெரியுமா டா”

நான் கேட்டதும் அவனின் கருத்த முகம் மேலும் இருண்டது, அவனுக்கு அபிராமி குறித்த நினைவுகள் வந்திருக்க வேண்டும், அபிராமியும் இவனை உண்மையாகவே காதலித்தாள், ஆனால் இவனின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அவளுக்கு இவன் மீதாக பயத்தை உண்டு பண்ணிவிட்டது. அவள் இவனைப் பிரிந்ததின் சரியான விவரம் எனக்கு தெரியாதென்றாலும், அவள் இவனை விட்டு முற்றுமாக விலகி சென்றுவிட்டாள் என்பது எனக்கு நிச்சயமாய் தெரியும்.

அவனை அப்படிப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது, அவன் கவனத்தை திசை திருப்ப..

“ஜிம்மி எங்க டா காணோம்” என்றேன்

“ஜிம்மியா இரு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, டைனோஸரின் முன்னங்கால்களிலும், பின்னங்கால்களிலும் நுண்மையாய் வெட்டிய கம்பிகளை நகங்களாக செருகிக் கொண்டிருந்தான்.

பிறகென்னை கொல்லைப்புறம் அழைத்து சென்றான், “ இந்த கொய்யா செடியை பார்த்தியா, பெரிசா வந்திருக்கு இல்ல”

“ம்” இதை எதற்கு என்னிடம் காட்டுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே

“இந்த செடி ரொம்ப நாளா வளராமலே இருந்துச்சு, ஏதாவது உரம் வச்சா வளரும்னு, ஜிம்மிய கொன்னு இதுக்கு உரமா புதைச்சுட்டேன்”

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போன்னேன் நான், அவனைப் பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது, அவன் எந்த சலனமும் இல்லாமல் சாதாரணமாய் நின்றிருந்தான். அவன் முகத்தில் பெருமை பொங்கும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது..

பசங்க சொல்வது போல் இவனுக்கு மனப்பிறழ்வு தான் ஏற்பட்டிருக்கிறது..

எனக்கு அதற்கு மேல் அவன் வீட்டில் இருக்க தைரியமில்லை, அவன் பதிலைக் கூட கேட்காமல் "கிளம்புறேன் டா" என்று சொல்லி வெளியேறிவிட்டேன்

குழந்தை போல் வளர்த்த பிராணியை கொல்ல மனம் வருமா ? எப்போதாவது இவன் வீட்டுக்கு வரும் என்னையே வாலாட்டி, துள்ளி இப்பக்கமும், அப்பக்கமும் ஒரு குழந்தை போல ஓடி சந்தோஷமாய் வரவேற்குமே அந்த அன்பான ஜீவனையா இவன் கொன்றுவிட்டான். அபிராமி இவனைப் பார்த்து மிரட்சியுற்றத்தின் அர்த்தம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது.

அவனை ஒரு சரியான மனநல மருத்துவருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று தோன்றியது, ஆனாலும் அவன் மீது உண்டான வெறுப்பும், பயமும் என்னை அவனை விட்டு விலகவே செய்தது. அதற்கப்புறம் அவனிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைக் கூட படிக்காமல் டெலிட் செய்ய ஆரம்பித்தேன்

அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன், அவள் தற்போது மகிழ்ச்சி பொங்கும் குரலில் பேசிக் கொண்டிருந்தாள், தன் துயரத்தில் இருந்து வெளி வந்து சமாதானமாகி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவளுக்கடுத்து ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருந்த பெண்ணும் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

சாலையில் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன, இதில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்க வேண்டும், கனரகவாகனங்களின் விளக்கு வெளிச்சங்கள் கண்களைக் கூச வைத்தன, என் அருகே அமர்ந்திருந்தவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கான கதையை ஏந்தி வந்தவன் மனதில் நடமாடிக் கொண்டிருந்தான்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..
நமக்கு பரிட்சயமான இடங்களில் அலையும் காக்கைகள்
மனிதனின் கால்கள் உற்றிருப்பவை

ஓட்டுக்கூறையில்.. குளியலறை சுவற்றில்.. கரைந்திரந்து
கூட்டத்தொடு பகிர்ந்துண்ணுல் அறியாத
சுயநலமானவை..

மிக உயர்ந்து பறக்கும் சிறகுகளுற
சகக்காக்கையை பருந்துக்கு கூலித்தரும்
அரக்க மனமுண்டவை..

தன் வடையைக்காத்துக்கொள்ள
நரிகளிடத்து
பிறர் வடையை காட்டிக்கொடுக்கும் வஞ்சமுள்ள‌வை..

யாரோ கல்லிட்டு நிறைத்த ஜாடியை ஆக்ரமித்து
நீரையும், ஜாடியையும் தனதென்று சொந்தமுரைக்கும்
தயக்கமற்ற பொய்ச்சொல்லுடையவை..

தமை மிரட்டும் கூகைகளுக்கு
காவல் நாயாக ஒப்பந்தித்துக் கொண்டு
இனங்காக்கும் காக்கைகளை
தூரோக‌த்தால் வேட்டையாடும் சூழ்ச்சியான‌வை..

சில பனம்பழங்களை சிதைக்கவே
மேலழுந்த அமர்ந்து விழுப்பிப்பவை..

நமக்கு பரிட்சயமான இந்த காக்கைகளுக்கு
கால்களைப் போன்று
முகங்களும்
மனிதனுடையவை..

வெள்ளி, 16 ஜூலை, 2010

உயிர்
ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மற்றொன்று.

வியாழன், 15 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை - 6
கானல் நீர் ஊறும் வெளியில்
இளைப்பார நிழல் தேடி
தன் நிழலை கண்டமர்ந்து
ஏமாந்து ஏமாந்து பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி காற்றின் வழியில்..

பொங்கி பொசுக்கும் வெயிலில்
மங்கும் சிறகுகளின் நிறங்களையும்
பொருட்படுத்தாது
நீள்கிறது அதன் தேடல்..

விரிந்திருக்கும் மணலின் வெஞ்சூட்டில்
நொடிந்து இரத்தம் சுண்டி சாகுமிடத்தில்
என்றைக்காவது முளைத்து கிளைக்கலாம் ஒரு மரம்
வண்ணத்துப் பூச்சியின் தேடலெதையும் அறியாமல்..

திங்கள், 12 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை-5
பால்யதில்
ஆழ்ந்த நிசி வேளையின்
அடர் உறக்கத்தில்
என்னை வெளியெறிய எண்ணமொன்று
தொலைந்து போனது
ஏதோ ஒரு திசையில்..

மீளாத அவ்வெண்ணத்தை
மீட்கவோ தேடவோ
முற்படவில்லை நானும்..

பாதை தவறி
என்னிடம் மீள தவித்து
தன் வெளி நெடுக்க என்னை கூவி
தேடுவதையும்
அறிந்திருக்கவில்லை நான்..

தூர தூரங்களிலும்
அறிமுகமில்லாத ஊர்களிலும்
தேடி தூளாவி அலைந்து
என்னை கண்டுவிட முடியாமல் சோர்ந்து
விரக்தியுற்றிந்த ஓர் இரவில்
நிகழ்ந்தது என்னோடான அதன் சந்திப்பு..

எனினும்,
அது என்னையும்
நான் அதனையும் அறிந்து கொள்ளவில்லை..

இருவரும்
எங்கள் அடையாளங்களை தொலைத்து
சிதலமுற்றிருந்தோம் அத்தருணத்தில்..

புதன், 7 ஜூலை, 2010

ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..

நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

அத்தருணத்தில்
வெற்றிரவின் பேய் பிசாசுகளெல்லாம்
மனசினுள் புகுந்து
என்னை கொல்ல ஆரம்பிக்கும்..

யாதும் அறிந்து
எச்சலனமும் அற்று
ஒரு அரக்கனென நீ இருப்பாய்
விகார மௌனத்துடன்..

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஒரு ஜென்னாய் இரு - 2

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதையில் நான் உணர்ந்து கொண்டது என்ன வென்று சொல்ல விழைகிறேன்..

அவரவர் மனநிலைக்கேற்ப கருத்துக்கள், கோணங்கள் மாறும்..

என் புரிதல் இதுதான்..

இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சப்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..

வெள்ளி, 2 ஜூலை, 2010

ஒரு ஜென்னாய் இரு -1

இவ்வுலகில் தோன்றிய பல ஆன்மீக தத்துவங்களில் ஜென்னும் ஒன்று..

தாவ் என்னும் மதத்தில் இருந்தே ஜென் தோன்றியதாக கூறுவார்கள்..

தாவ் மனிதனும் இயற்கையும் இணக்கமாக வாழ்வது என்பதே இதன் கருத்து. தாவ் மதத்தை ஆரம்பித்தவர் சாங்லிங் என்பவர்.

ஜென், தாவ் மதத்தில் இருந்து தோன்றியதென்று கூறினாலும்..

தியானம் - தியான் - ஜென் என்னும் ஓஷோ, ஜென் இந்திய ஆன்மீக தத்துவங்களில் இருந்தே பிறந்ததாக கூறுகிறார்..

எனக்கு ஓஷோவின் கருத்தில் உடன்பாடு இல்லை, தியானம் என்பது எல்லா ஆன்மீகவாதிகளுக்கும் பொதுவானது..

இந்திய ஆன்மீக மேதைகளால் கற்பிக்கப்பட்ட குண்டலினி என்பதே முழுதாக இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல..

7 குண்டலினிகளில் 2 மட்டுமே நாம் அறிந்தது, மற்ற 5-ல் 2 கிறிஸ்துவர்களிடம் இருந்தும், 3 சூஃபிகளிடம் இருந்தும் பெற்றவை..

அதாவது இந்த தியானம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய ஒன்றல்ல, அது உலகளாவி பரந்த ஒன்று..

அப்படி இருக்க ஜென் - தியான் என்பதெல்லாம் சொல்வதற்கு அழகாக இருக்குமே அன்றி, ஏற்க கூடியதல்ல..

நம் ஆன்மீகத்திற்கு இருக்க கூடிய பெரும் சிறப்பென்ன வென்றால், தியானத்துக்கென்று நம்மிடம் உபநிஷங்கள் இருக்கின்றன, இவைப் போன்ற நூல்கள் மற்ற மதங்களில் இல்லை..

அஸ தோமா சத் கமய
தம ஸோமா ஜோதிர் கமய
மிருத் யோமா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்


இந்த உபநிஷ மந்திரமானது எல்லா ஆன்மீக கொள்ளைகளுடனும் ஒற்றுப் போகிறது..

அஸ தோமா சத் கமய

பொய்மையில் இருந்து என்னை மெய்மைக்கு அழைத்து செல்வாயாக

தம ஸோமா ஜோதிர் கமய

இருளில் இருந்து என்னை வெளிச்சத்துக்கு அழைத்து செல்வாயாக

மிருத் யோமா அமிர்தம் கமய

மரணத்தில் இருந்து மரணமற்ற நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக


இதைத்தான் அனைவரும் தேடுகிறோம்.. இந்த நிலையை அடைய துறவிகள், காடு சென்று தவமிருந்தார்கள் என்கிறோம்..

இதைத்தான் ஜென்னும் தன் மூன்று பண்புகளாக கூறுகிறது. மௌனம், தனிமை, ஏற்புத்தன்னை.

மௌனம் - தவம்

தனிமை - காடு புகல்

ஏற்புத்தன்மை - விழிப்புநிலை

இப்படித்தான் ஓப்பீடு செய்துக் கொள்கிறேன் நான்..

ஏற்புத்தன்மை

இதனை பெரும் ஆன்மீகவாதிகள் எல்லோரும் நமக்கு போதித்திருக்கின்றனர்..

அஸ தோமா சத் கமய இந்த வரிக்கும் ஏற்புத்தன்மைக்கும் ஓற்றுமைகள் உண்டு..

இந்த வாழ்வில் நிகழும் ஒவ்வொன்றும் எனக்கானது, என்னுடையது, நான் சந்திக்க வேண்டியது என்னும் விழிப்பு நிலையை தருவது..

ஒரு இன்பத்தில் இருந்து நம்மால் எப்படி விலகி நிற்க இயலாதோ அவ்வாறே ஒரு துன்பத்தில் இருந்தும் நம்மால் விலகிவிட இயலாது, வாழ்க்கை உனக்கு பரிமாறும் ஒவ்வொன்றையும் ருசி, அது உனக்கானது, எதை நாம் சுவைக்க மறுக்கிறோமோ, அதனை நாம் இழக்கிறோம், அதனால் நாம் இழப்பது வாழ்வையும் தான்..

இதுதான் ஏற்புத்தன்மையின் அடிப்படைத் தத்துவம் என்றாலும், ஏற்புத்தன்மை என்னும் பண்பில் பல உட்பொருள்கள் உண்டு..

அதாவது "நீ நீயாய் இருத்தல்" என்பதும் "நான் நானாய் இருத்தல்" என்பதும் "நாம் நாமாய் இருத்தல்" என்பதும் இந்த ஏற்புத்தன்மையின் உட்பொருளாகும்

புத்தம் என்பது புத்தனாய் வாழ்த்தல் என்பார்கள்..

ஆனால் நான் நானாய் வாழும் பொழுது புத்தனாய் வாழ இயலாதுதானே..

புத்தனை எனக்குள் உயிர்ப்பித்து, புத்தனை எனக்குள் வாழ்வித்தாலும் நானாய் வாழ இயலாதுதானே..

புத்தன் என்பவன் ஒரு வாசல், ஒரு வாசலின் வழியாக நான் உள்ளும் நுழையலாம், வெளியும் போகலாம், உள் நுழைத்தல் என்பது என்னுள் ஆழ்ந்து போதலாகவும், வெளியே செல்வது என்பதை நானல்லாதவைகளில் இருந்து வெளியேறுவதாகவும் கருதுகிறேன்..

என்னுள் ஆழ்ந்து போகும் போதோ, நானல்லாதவைகளில் இருந்து நான் வெளியேறும் போதோ நான் கலப்படமற்ற நானாக இருக்கிறேன்..

நான் நானாகவும், நீ நீயாகவும் இருத்தல் என்பது யாவரும் சமம் என்பதையும் காட்டுக்கிறது..

யாவரும் சமம் எனும் போது, இறைவனும் நாமும் கூட சமம் தானே ?

எங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்றால், எங்கும் நானும் நிறைந்திருக்கிறேன் தானே ?

இந்த சிந்தனையோடு இரு கவிதைகளை பார்ப்போம்..

பழைய வீடு
ஊர்ந்து செல்கிறது நத்தை
புத்தனின் முகம்..

----------

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


தொடரும்..

தலைப்பற்ற கவிதைகள் - 4
என்றோ இருந்த பிரியத்தின் விழைவாய்
இன்று வாங்கி வந்தேன்
கண்ணாடி தொட்டியும்
இரு மீன்களும்..

இம்முனையும் அம்முனையும்
இருதலை கொள்ளியாய் அலையும்
மீன்கள் துழாவலாம்
கண்ணாடி தொட்டிக்குள் ஒரு ஆழியை..

பெருநீர் பரப்பும்
உப்பு சுவையும் அற்ற‌தால்
மீன்களுக்கு பிடிக்காமல் போகலாம்
என் பிரியத்தையும்
இத்தொட்டியையும்..

இழ‌ந்த‌ ச‌முத்திரத்துயரின் தனிமையின் நின்று
‌மீளும் முய‌ற்சியில்
இர‌ண்டும் புண‌ர்ந்து உயிர்ப்பிக்கலாம் சில குஞ்சுகளை
நாளை அவை நம்பவும் கூடும்
கண்ணாடி தொட்டியே ஒரு கடலென..

கல்லறையொன்றை கடக்க நேரும் போதுகல்லறையொன்றை
கடக்க நேரும் போது
ஒரு மசூதியைப் போன்றோ
ஒரு ஆலயத்தைப் போன்றோ
ஒரு கோவிலைப் போன்றோ
அதற்கு மரியாதை செலுத்துங்கள்..

ஏனெனில்,
உங்களுக்கு தெரியாமல்
உங்களுக்கு தெரிந்த
யாரையும் புதைத்திருக்கலாம் அங்கு..

உங்களுக்கு தெரியாமல்
உங்களையும் நாளை
யாரும் புதைக்கலாம் அங்கு..

புதன், 30 ஜூன், 2010

சூஃபி கவிதைகள் (தமிழில்) - 3

என்னை நீ நேசிக்கிறாயா ?

தான் நேசிப்பளிடம் காதலனொருவன்
"என்னைக்காட்டிலும் நீ
உன்னை மிக நேசிக்கிறாயா ?"
என கேட்டான்

நேசிப்பிற்குரியவள் சொன்னாள்:
"என் வாழ்வானது உன்னுடையது
ஏனெனில்
"நான்" என்பது மாய்ந்தாயிற்று
எனை பொருத்தமட்டில்"

என் இருப்பு உனக்கும் மட்டுமானதே
ஏனெனில்
என்னிலிருந்து, என் செயல்களிலிருந்து
நான் மறைவுற்றேன்..

உன்னறிதல்களில் இருந்தே
ஒரு மேதையாகினேன்
ஏனெனில்
நான் கற்றன யாவும் மறந்திழந்தேன்..

உன் பலத்தால்தான்
என்னால் யாவும் இயல்கிறது
ஏனெனில்
என் பலமனைத்தும் தொலைத்திழந்தேன்..

நான் எனை நேசிக்கிறேன் என்றாலும்
உன்னையே நேசிக்கிறேன்
நான் உனை நேசிக்கிறேன் என்றாலும்
என்னையே நேசிக்கிறேன்..

-ரூமி


---------------------------

Do You Love Me?


A lover asked his beloved,
Do you love yourself more
than you love me?The beloved replied,
I have died to myself
and I live for you.I’ve disappeared from myself
and my attributes.
I am present only for you.I have forgotten all my learning,
but from knowing you
I have become a scholar.I have lost all my strength,
but from your power
I am able.If I love myself
I love you.
If I love you
I love myself.

செவ்வாய், 22 ஜூன், 2010

சூஃபி கவிதைகள் (தமிழில்) -2

உனது கைகளிலொரு மாசற்ற குழைந்தையாக

நான் மிக உயர்ந்து மேலெழுந்த
எனதன்பின் அலையை
பிரளயமாய் உன்னில் பாய்ச்சுகிறேன்..

அது
உனது யாதொரு பயத்தையும், மாயையையும்
அழித்துவிடும்
சில நேரம் விழிகளை மூடு.

அவ்வாறு நிகழ்கையில்
உனது கைகளில் மாசற்ற குழந்தையாக
இறைவன் மாறுவான்..

பின் படைப்பு யாவற்றையும்
நீ கவனித்துக் கொள்ள கடவாய்..

- ஹஃபீஸ்

------------------An Infant In Your ArmsThe tide of my love
Has risen so high let me flood
over

You.

Close your eyes for a moment
And maybe all your
fears and fantasies

Will end.

If that happened
God would become an infant in your

Arms

And then you
Would have to nurse all

Creation!

சூஃபி கவிதைகள் (தமிழில்) -1


என் நேசன் தோன்றுகையில்


என் நேசன் என்முன் தோன்றுகையில்
எந்த விழியால்
அவனை காண்பேன் நான்?

என்னுடையதால் அல்ல..
அவனுடைய விழியால்
ஏனெனில்
அவனைத் தவிர யாராலும்
அவனை காணுதல் இயலாது..


-------------------


When My Beloved Appears


When my Beloved appears,
With what eye do I see Him?

With His eye, not with mine,
For none sees Him except Himself.

வெள்ளி, 21 மே, 2010

தலைப்பற்ற கவிதை - 3

பரிமாறிக்கொள்ள
பிரிவதற்கு முந்தையதோ
பிரிவிற்கு பிந்தையதோவான
நினைவுகள் நம்மிடம்
எதுவும் இருந்திருக்கவில்லை
அந்த சந்திப்பில்..

என் புது உறவுகளைப் பற்றிய
பெருமித வார்த்தைகளோ
ஏகாந்த காலங்களில் உற்ற
வலி துயரைங்களையும்
பகிர்ந்து கொள்ளவில்லை..

மௌனத்தின் கதவுகளை பலமாய் சாத்திக் கொண்டு
நம்மில் ஒருவர் உதிர்க்கப் போகிற
முதல் வார்த்தைக்காக
காத்து கிடந்திருந்தோம்..

உன் எதிர்ப்பார்ப்புக்கள் என்னுடையதையும்
என் எதிர்ப்பார்ப்புக்கள் உன்னுடையதையும்
எதிர்நோக்கி ஏக்கத்தவமிருந்ததை உணர்ந்திருந்தும்
இருவரும் நம் ஆங்கார அரியனையில்
அழுத்தமாய் அமர்ந்திருந்தோம்..

இதே ஆகாரந்தான்
அன்றொரு பிரிவுக்கு ஆதாரமாய் இருந்தது..
இன்றும் நம் களையாத மௌனத்தின்
கதவாய் இருக்கிறது..

நாம் நிறைய மாறி இருக்கிறோம்
உருவத்திலும்..
வாழ்விலும்..
என்றாலும்
மாறாமல் இருக்கிறது
நம் ஆங்காரம்
நம் காதலைப் போல்..

தலைப்பற்ற கவிதை - 2
ஏளன சிரிப்பின்
நிசப்தமான அரக்க ஓசைகள்
செவிப்பறை கிழிய
அதிர்ந்தது அன்றொரு நாள்..

அந்த சிரிப்புக்கான காரணம்
என் இயலாமையாகவோ
என் அறியாமையாகவோ
என் ரசனையின்மையாகவோ
என் கவனமின்மையாகவோ
என் தவறுதலாகவோ
ஒரு தர்ம சங்கடமான சம்பவமாகவோ
இன்னப் பிற
எதுவாகவும் இருக்கலாம்..

தப்புரைக்க சாத்தியமற்ற
காரணமாயினும்
தலை குனிவோடான
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதானத்துக்கும் ஆறாத என் வலிகளை..

தலைப்பற்ற கவிதை - 1

ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

வியாழன், 6 மே, 2010

மூன்று கவிதைகள்முதல் கல்..

பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..


-------------------ஒரு சுடு சொல்


ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

-----------------------------------------------------நீ

கடவுளின் கைகள் அனுபிய
தூய ஆறுதலாய் நீ வந்தாய்

எனது புன்னகையும் மகிழ்ச்சியும்
உனதன்பின் பெருவெளியில்
நிம்மதியாய் உயிர் வளர்த்து திளைத்தன..

பூக்களாய் உனது கருனைகள்
உதிர்ந்த போதெல்லாம்
என் மனப்புல்வெளிகளில்
அவை பனித்துளிகளாய் நிறைந்தன..

வானம் தன்னை திறந்து
உச்சரித்த பரிசுத்த வார்த்தையின்
புனிதமாய் நீ இருந்தாய்..

கொடுக்கப்படுகிற யாவும்
எடுக்கப்படும் என்பதை நீ
உணர்த்திய தருணத்தில்..

வாழ்வின் எல்லா வீதியிலும்
பூத்துக் குலுங்க
நீ நட்ட மரங்கள் யாவும்
சிலுவைகளாய் மாறி இருந்தன...

திங்கள், 1 மார்ச், 2010

சொல்லப்படாத ஒரு காதல்
சொல்லப்படாத ஒரு காதல்
தன் கன்னிமையின் கர்வத்தோடு
இன்னும் இருக்கிறது
புதிதாய் எனக்குள்...


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..


பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..

ஒரு கிழமையில்
ஒரு தருணத்தில்
ஒரு நொடியில்
சொல்லப்படுவதற்காய்
காத்திருக்கிறது அது..

உனக்குள்ளும் இது போலொரு
சொல்லப்படாத காதல்
காத்திருக்கலாம்
எனக்காகவோ
வேறெவருக்காகவோ

வியாழன், 25 பிப்ரவரி, 2010

அனாதரவான வார்த்தை
திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துழாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..

புதன், 17 பிப்ரவரி, 2010

துரோகத்தின் கத்தி
முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..