வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தேடல்

யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்
பேரண்டத்தின்
பேரெல்லை வரை..

ஒவ்வொன்றாய் வெளிநடந்தன
உணர்வுகள் என்னுள் இருந்து..

வெறிநாயின் முகமும்
குருதி வடிகிற வாயுமாய்
ஒருத்தன் வெளியேறினான்..

யாரனெ வினவினேன்

பதில்:
நான் குரோதம்

அடுத்தொருவன்
கைப்பையுள்
பொதிந்த முகமூடிகளுமாய்
வாசல் கடந்தான்..

யாரென வினவினேன்

என் பெயர் துரோகம்
எனச் சொன்னான்

பருத்த உடலும்
திருப்தி இல்லா முகமுமாய்
இன்னொருத்தன்

நீ யாரப்பா ?

பதில்:
ஆசை

பெருமை பொதிந்த தோற்றமும்
பெரும்பாலும் பேசாத இதழுமாய்
இன்னொருத்தன்

உன் பெயர் ?

பதில்:
ஏளனச்சிரிப்புடன்
என்னைப் பார்த்துச் சொன்னான்
நான் அகந்தை..

ரோகத்தில் சுருங்கிய முகமும்
புண்ணுடைந்து சீல்வழிகிற
புலன்களுமாய்
மற்றொருவன்

நீ ?

பதில்:
காமம்

மழைத்துளி போன்ற விழிகளும்
பூவெளி போன்ற புன்னகையுமாய்
ஒருவன்

யாரென வினவினேன்

பதில்:
இதயத்தின் இமைதிறந்து
எனைப் பார்த்து
முறுவலுடன் கூறினான்
நான் அன்பு

முற்றிய வயதும்
நரைத்த தாடியும்
அழுக்கு சட்டையுமாய்
ஒரு கிழவன் வெளிவந்தான்

நீங்கள் யார் ?

பதில்:
உனக்குள் உள்ள என்னை
உலகில் தேடுகிறாய்
நான் அமைதி
நான் நிம்மதி
நான்தான் ஞானம்

நீ யாரென
அனைவரின் சுட்டுவிரலும்
எனை நோக்கி நீள..

உரைத்தேன்:
நான் மனிதன்

ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..


-ஆதி

தாயக பூக்கடை

சூரியன் திணிந்தும்
சுருங்கா இருட்டாய்

உலகத்தின் உருகாட்டும்
கண்ணாடியாய்

இழிந்ததின் அடையாளமாய்

குருட்டு நீரே
உன் மீதுதான் எத்தனை
கோணங்கள்..

சுகாதாரம் முழங்கும்
சுயநல சமூகம்
தன் கழிவு யாவயும்
உன் மேல் கிடத்தி
சாக்கடை என்றே உன்னை
சாற்றும்..

கைப்பட்ட யாவையும்
உன் மெய்ப்பட எறிந்து
தேங்க வைத்து
தெருவைக் கெடுக்கும்..
முன்னேற விடாமல்
உன்னை தடுக்கும்..

கூடாரமிட்டு கிருமிகள்
சேதாரமாக்கும் நோய்களை
மகப்பெற்றிடினும்
அவை கருவுற்றது
யார் செய்கைகளால்.. ?

முந்நீர் தண்ணீர்
நன்னீர் எனும்
உயர்ச்சி யாவும்
நீ கரி பூசி கொண்டதால்தான்
மற்றவைகளுக்கு..

தாள்ந்தோர் உயர்வரெனும்
தத்துவ மொழிப்படி இனி நீ
சாக்கடை அல்ல
தாயக பூக்கடை..

-ஆதி

வியாழன், 26 பிப்ரவரி, 2009

அடர்குழலும் ஆறும் - சிலேடை 2

சுழிவிழும் கட்டவிழ்க்கும் சொக்கவைக்கும் காற்றில்
நெளியும்; மலரும்; நிழலும் - வெளிறும்
உடைவுற சோறுகெடும் உச்சிப் பிறக்கும்
அடர்குழலும் ஆறுமாகும் நேர்!

சுழிவிழும் - தலையில் சுழி இருக்கும் / ஆற்றிலும் நீர் குழல் ஏற்படும்

கட்டவிழ்க்கும் - கொண்டையையோ ஜடைபின்னலையோ அவிழ்க்கும் / அடைப்படிருக்கும் அணையில் இருந்து திறக்கப்படும்

சொக்கவைக்கும் - அழகால் மயங்க வைக்கும்

மலரும் - கரையோர மரங்கள் பூ உதிர்க்க சூடும் / குழலிலும் மலர் சூடுவர்

நிழலும் - தூரத்து மலையில் இருந்து அருகு உள்ள யாவின் நிழலலையும் சுமக்கும் / கருப்பாய் இருக்கும்

வெளிறும் - நுரைத்து வெள்ளையாகும் / நரைத்து வெள்ளையாகும்


உடைவுற சோறு கெடும்
- ஆறு உடைப்பெடுத்தால் பயிர்களை அழித்தோ அல்லது ஊரை சுற்றி வளைத்தோ சோறுக்கு வழியில்லாமல் செய்துவிடும் / முடி விழுந்து சோற்றை கெடுக்கும் ( எடுத்து போட்டு சாப்புடுவதெல்லாம் வேற விசயம் :) )

உச்சி பிறக்கும் - மலை உச்சியில் பிறக்கும் / தலை உச்சியில் பிறக்கும்

அடர்குழலும் ஆறுமாகும் நேர்! - இப்படி ஒற்றுமை இருக்க குழலும் ஆறும் ஒன்றே

வெக்கை

வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..

பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..

ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...

வெயில் காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..

அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..

பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

- ஆதி

பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
நீண்டிருக்கும் சுற்றும் நிலம்நோக்கும் மைப்பூணும்
ஆண்டிருப் போனாட்சி சாய்க்கும் ஜெகமதிர்த்தும்
சொல்லா தனசெய்யும் சொல்லுக பேனாவும்
பொல்லாத பெண்விழியும் ஒன்று!

பிகு:- பேனா - ballpoint என கொள்க.. தவறுகள் இருந்தாலும் சுட்டுக மக்கா..


நீண்டிருக்கு
ம் - நீளமாக இருக்கும்

சுற்றும் - எழுதுகையில் பேனாவின் முனை சுற்றும் / சுற்றும் விழி சுடரே :)

நிலம்நோக்கும் - எழுத முனைகையில் நிலம் நோக்கும் / நாணத்தில் இமை மடுத்து நிலம் நோக்கும்

மைப்பூணும் - மை நிரப்பில் கொள்ளும் / மை தீட்டுவர்


ஆண்டிருப்போன் ஆட்சி சாய்க்கும்
- பத்திரிகைகளின் எழுத்தாலோ எத்தனையோ ஆட்சி மகுடங்கள் மாறி இருக்கின்றன / காதலுக்காக மகுடம் துறந்தவர் பலர் உளர்


ஜெகமதிர்த்தும்
- புரட்சி எழுத்துக்கள் சரித்திரங்களை புரட்டி போட்டிருக்கின்றன / அபிநய விழிகள் அவையை அதிர செய்யும் (பரதத்தில்)

சொல்லாதன செய்யும் - மேலே குறிப்பிடாத இன்னும் பலவற்றையும் செய்யும்


சொல்லுக பேனாவும் பொல்லாத பெண்விழியும் ஒன்று!
- ஆகையால் சொல்லுக பேனாவும் வயப்படுத்தும் பெண்விழியும் ஒன்று என்று

புதன், 25 பிப்ரவரி, 2009

அந்திமத்தில் அந்த நிலா

எதிராளியின் எல்லா காய்களையும்
காம சதுரங்கத்தில்
வெட்டி சாய்த்து
அடுத்த அடியில்லாமல்
ராஜாவை முற்றுகையிடும்
ராணியவள்..
உடைத்தோகை
உதுத்தாடும் கேப்ரே மயில்..

கரப்பான்பூச்சிகளாய் மீதூரும்
கண்களில் அருவருப்புண்டாலும்
மண் சிற்பமாய்
மரத்துவிட்டது மனதும் உடம்பும்
பழக்க போக்கில்..

சிகரெட் புகை
ஊடே பூக்கும் நிலவாய்
சிருங்கார சேற்றின்
செந்தாமரையாய்
விரக ஸ்தலத்தின்
வழிபாட்டு தேவதையாய் நாளும்
பலப்பல அவதாரங்கள் அவளுக்கு..

மன்மதனின் பிரம்மாஸ்திரமாய்
எந்த சிவ நோம்பையும்
நொய்ய தகர்த்த அழகுதிறம்
குலைய துவங்கிய பின்
குறைய துவங்கினர் நுகர்வோர்கள்..

யார் யாரோ களித்தூடிய
சதை சிலையை
விருந்தோம்ப விழைவுண்டது
காசநோயும்..

கட்டிலில் சிதறிக்கிடக்கிற
சல்லாப சிரிப்புகளையும்
சிருங்கார தெறிப்புகளையும்
அதிர்த்திக் கொண்டிருக்கிறது
இரும்பல் சப்தங்கள்..

மங்கிய மலராய் உதிர்ந்த
தேக சருகுக்கு
உதவ மறுத்து
உவட்டி கொண்டிருக்கிறது சுற்றம்..

தற்போது
மாத்திரைக்கு மட்டுமல்ல
மரணத்திற்கும் வழியில்லை
அவளுக்கு..

பிளாஸ்டிக் பூக்கள்

வேர்களின் தகிப்புக்கு
நீர் கேட்ட செடிகளை
ஊர்கடத்தி
பற்பல வண்ணங்குலைந்து
அறிவியலின் ஆக்கதில் பூக்கும்
'பிளாஸ்டிக்' செடிகளை
நுகர்வோர் அதிகம்.


வளர்த்த ஆசைக்கு
மலராத வருத்தத்தின் அதிர்வுகளாய்
வீட்டுள்,
அழகு பெயர வாங்கி
ஆற்றாமை தணிப்பர் சிலர்.


பருவத்தடை பழக்கி
உலர்வையும்
உதிர்வையும் மீறி
நிரந்திர பச்சை நுரைக்கும்
இலைகளின் நுனியில்
கனக்கும்,
காற்றில் முணகாத ஏக்கங்கள்.


மேசையில்
கண்ணாடி அலமாரியில்
தொலைக்காட்சியின் தலையில்
தேன் தாது நறுமணம்
அளவளாம்ல் விரியும்
இயற்கையை கடந்த இதழ்கள்.


வெளிறா நிறம் கொண்டும்
பூப்புணர் வண்டோ
மென்விரல் மாதரோ
வருடாமையால்,
வெறுமையே பூரிக்கும்
'பிளாஸ்டிக்' பூக்களின் புன்னைகை..


-ஆதி

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

முற்றம்தென்னை நிழல் விழும்
உன் முற்றத்தை
நீ கூட்டும்
அழகே தனி.

அந்த நளினத்தில்
கரைய
நானும்
என் காதலும்
பார்வை
தவமிருப்போம் தினம்.

ஈர குழல் முடிந்து
நீல தாவணியில்
நீ வந்து...

தரை கூட்டி
தெள்ளிய தண்ணீர் தெளித்து
வெள்ளிய கோலம் இடுகையில்
நீர்வார் நெற்றியை
உன் புறங்கையால் துடைப்பாய்..

அப்பொழுது
என்னை வெளியேறி ஒருவன்
உலக காற்றை
குளிர்த்தும் விசிறியும்..
மொத்த வெயிலையும்
மறைக்கும் குடையும்..
உனக்கு கொணர்வான்..

நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி திரும்பினாய்
என் மனைவியாய்...
ஒருத்தனும் வெளிவரவில்லை
உனக்கு விசுறவும்..
ஒரு டம்ளர் தண்ணீர் தரவும்..

வழுவமைதிவகை வகையாய்
சேலை சுடிதார் தாவணி என்றணிந்து
அதற்கொத்த அலங்காரமும் புனைந்து
முகைந்திருப்பாள்..

மென்மையாகவும்
மிரட்டல் குரலிலும்
சில நேரம் வெம்மையாகவும்
*சிக்னல் கேட்பாள்*


நிறுத்த குறி விழுந்து
நிற்க நேர்கையிலெலாம்
என்னிடமும் வாங்கிவிடுவாள்
ஒரு ரூபாயை…


நானும்
நாளுக்கொரு நாணயத்தை
ஞாபகமாய் எடுத்துவைப்பேன்
அவளுக்கென

யாதென்று தெரியவில்லை
யார்க்கும் கூறாமல்
எங்கேயோ ஏகிவிட்டாள்

அவள் கையுற
ஆயத்தாமயிருந்த நாணயங்களும்
என் பையிலேயே தேங்கின..

கொடுப்பவர்க்கு ஆசிர்வாதமும்
கொடுக்காதவர்க்கு முகசுழிப்பும்
கேலி செய்வோர்க்கு
கெட்டவார்த்தையும் என
அவள் சிந்தும் யாதுமின்றி
வெறுமையில் வீடு கொண்டது
“சிக்னலும்”

அப்புறமொரு நாள்
விண்ணேந்திய விண்மீன்கள்
மண்ணாந்து பார்த்திருக்கும் வேளையில்
தற்செயலாய் சந்தித்தேன் அவளை..

வழக்கமான நாணயத்தை
நீட்டியவாறு
வராமைக்கு காரணம் கேட்டேன்

*நிர்வாணம்* செய்து கொண்டேன்
இனியும் வரமாட்டேன்” என்றாள்..

பாலிளம் மழலையிடம்
தோல் கசங்கிய கிழவியிடம்
வரம்பு தாண்டும் வாச்சாயனர்கள்
விடவா போகிறார்கள் அவளையும்..


(*சிக்னல் கேட்டல் - சிக்னல் இரத்தல், இதுமாதிரி கடை கேட்டல், பஜார் கேட்டல், ரயில் கேட்டல் என்று பல இரத்தல்கள் உண்டு

*நிர்வாணம் - ஆண் அம்சங்களை நீக்கும் அறுவை சிகிச்சை, நிர்வாணம் செய்து கொண்டவர்களைதான் திருநங்கைகள் என்றழைப்பார்கள், ஆண்மையின் அம்சத்தோடு பெண் உடையோடு உலவுவர்களை கோத்தி என்று சொல்வார்கள்)

முதிய சரணாலையம்

உன் அழகினில்
உண்டாகி இருக்கும்
சிதைவுகளில் இன்னும்
புதைந்திருக்கின்றன
என்றன் மையல்கள்..

உன் கார்குழல் வெட்டும்
மின்னல் நரைகளில்
கன்னச் சுருக்கங்களில்
மேலும் கசிந்து கூடுகிறது
என் காதல்..

முகைகளாய் உதிர்ந்த
பல்லற்ற வாய்ச்சிரிப்புகள்
உன் பருவச் சிரிப்பை காட்டிலும்
மயக்கம் தருபவை..

கைக்கோலேந்தி கால் பின்ன
நீ நடக்கும் நடைகள்
அன்னங்களை மிஞ்சுபவை..

உன் சுருங்கிய கைகள்
என்னை சீந்து இன்பம்
தேவதைகளின் ஆசிக்கு
இணையானவை..

நடுங்கும் இதழ்களால்
நீயெனை அழைக்கும் வார்த்தைகள்
என் கவிதையைவிடினும் அழகானவை..

நீ என் காதல் பறவையின்
முதிய சரணாலையம்..

வீழும் உலகப் பொருளாதாரம்எச்சரிக்கைக் குறிகளோடு
வீழ்ந்தவாரிருக்கிறது
உலக பொருளாதாரம்..

முதலீட்டாளர் முதல்
முடித்திருத்தகர் வரை
யாவரையும் தன் கோரக்குரலால்
குலை நடுங்க வைக்கிறது..

ஊதிய குறைப்பு
ஊக்கத்தொகை நிறுத்தம்
சலுகைகள் நீக்கம்
பணிப்பறி போதல் என்று
ஏதாவது ஒரு உருவத்தில்
ஏற்படுத்துகிறது மன அழுத்தத்தையும்
நாளை பற்றிய கேள்வியையும்
எல்லோரிலும்..

கூடும் பளுவால் உண்டாகிறது
குடும்பங்களிலும்
நெருக்க குலைவுகள்..


துண்டு விழும் செலவறிக்கை..
துண்டுகளோடு காத்திருக்கும் கடன் அட்டை..
துண்டு போட ஆயத்தமாகும் நிதிநிறுமவணங்கள்
என்று துண்டு மயமத்தில்
துண்டாகி கொண்டிருக்கின்றன நம்பிக்கைகளும்..

அமுதக்குடம் ஈயும் பணப்பாற்கடலில்
ஆலகாலம் மேல்வந்த பிறகுதான்
நிலையாமையின்
அர்த்தம் கசடற விளங்கியது..