Photobucket

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தேடல்





யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்
பேரண்டத்தின்
பேரெல்லை வரை..

ஒவ்வொன்றாய் வெளிநடந்தன
உணர்வுகள் என்னுள் இருந்து..

வெறிநாயின் முகமும்
குருதி வடிகிற வாயுமாய்
ஒருத்தன் வெளியேறினான்..

யாரனெ வினவினேன்

பதில்:
நான் குரோதம்

அடுத்தொருவன்
கைப்பையுள்
பொதிந்த முகமூடிகளுமாய்
வாசல் கடந்தான்..

யாரென வினவினேன்

என் பெயர் துரோகம்
எனச் சொன்னான்

பருத்த உடலும்
திருப்தி இல்லா முகமுமாய்
இன்னொருத்தன்

நீ யாரப்பா ?

பதில்:
ஆசை

பெருமை பொதிந்த தோற்றமும்
பெரும்பாலும் பேசாத இதழுமாய்
இன்னொருத்தன்

உன் பெயர் ?

பதில்:
ஏளனச்சிரிப்புடன்
என்னைப் பார்த்துச் சொன்னான்
நான் அகந்தை..

ரோகத்தில் சுருங்கிய முகமும்
புண்ணுடைந்து சீல்வழிகிற
புலன்களுமாய்
மற்றொருவன்

நீ ?

பதில்:
காமம்

மழைத்துளி போன்ற விழிகளும்
பூவெளி போன்ற புன்னகையுமாய்
ஒருவன்

யாரென வினவினேன்

பதில்:
இதயத்தின் இமைதிறந்து
எனைப் பார்த்து
முறுவலுடன் கூறினான்
நான் அன்பு

முற்றிய வயதும்
நரைத்த தாடியும்
அழுக்கு சட்டையுமாய்
ஒரு கிழவன் வெளிவந்தான்

நீங்கள் யார் ?

பதில்:
உனக்குள் உள்ள என்னை
உலகில் தேடுகிறாய்
நான் அமைதி
நான் நிம்மதி
நான்தான் ஞானம்

நீ யாரென
அனைவரின் சுட்டுவிரலும்
எனை நோக்கி நீள..

உரைத்தேன்:
நான் மனிதன்

ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..


-ஆதி

கருத்துகள் இல்லை: