Photobucket

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

உன்னிடம் என்ன இருக்கிறது ?
















பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற வைத்திட இயலுமா உன்னால் ?


ஒரு மரம் வெட்டப்படுவதை
ஒரு பறவை அல்லது விலங்கு வேட்டையாடப்படுவதை
ஒரு சிசு கொல்லப்படுவதை
ஒரு பெண் அல்லது சிறுமி கற்பழிக்கப்படுவதை
ஒரு குழந்தை அநாதரவாய் அல்லது பிச்சையெடுக்க விடப்படுவதை
ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை
ஒரு நாடு வறுமையால் கொள்ளை தொழில் உறுவ‌தை
ஒரு இனம் கொன்று குவிக்கப்படுவதை
என ஏதேனும் ஒன்று
நிகழ்தலிலிருந்து உன்னால் தடுத்துவிட இயலுமா ?

பிறகு
இவ்வுலகினுக்கு தர அல்லது செய்ய
உன்னிடம் என்ன இருக்கிறது ?

அன்பை தவிர....

திங்கள், 18 ஜூலை, 2011

நிர்வாணம்




















நிர்வாணத்தை மறைக்கிற
ஆடைகளிடம்
மறைக்க இயலாது
நிர்வாணத்தை....

ஆடைகள் நிர்வாணமானவை
நிர்வாணம் ஆடைபோன்றவை

நிர்வாணம் உன் இணை
உன் இணை உன் ஆடை

ஆடைகள் நிர்வாணத்தை மறைப்பதில்லை
அவை நிர்வாணத்தை தெரிந்து கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு உறவு கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு நிர்வாணமாய் ஆகிவிடுகின்றன


கடவுளின் கடவுள்
--------------------------

நிர்வாணம் என்பது
ஒரு பேருண்மையின் பேருண்மை
ஆகவே
ஓர் உயிர் உற்பத்திக்கு
இரு நிர்வாணங்கள் தேவைபடுகிறது..


தொலைந்த தூய்மை
----------------------------

நிர்வாணத்தை மறைக்கத் தெரியாதவரை
மனமும் நிர்வாணமாய் இருந்தது
நிர்வாணத்தை மறைக்கக் கற்றப்பின்
மனம் வக்கிரங்களால் நிரம்பிவிட்டது..


பொருள் பொய்த்தல்
--------------------------

நிர்வாணத்தை பற்றி பேசுகையில்
ஒருவன் அசூயை கொள்கிறான்
ஒருவன் வெட்கித் தலைசாய்கிறான்
ஒருவன் தான் பார்த்தக் காமப்படத்தின்
சரசக் காட்சியில் ஆழ்கிறான்
ஒருவன் மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியின்
நெகிழ்ந்த உடைகளைப்பற்றி யோசிக்கிறான்
ஒருவன் விபத்தில் பிணமானவளின்
நிர்வாணத்தில் ஊருகிறான்...
ஒருவன் ரயில் பயணமொன்றில்
முட்புதர் நடுவில் மலங்கழித்துக் கொண்டிருந்த
ஒருத்தியைப் பற்றிச் சிந்திக்கிறான்
ஒருவன் தன் அந்தரங்கங்களின் பழைய ஞாபகங்களில் மூழ்குகிறான்
ஒருவன் சிகெரட்டென காமத்தில் புகைய ஆரம்பிக்கிறான்
ஒருவன் பேசுபவனை வக்கிரக்காரனெனப் பழிக்கிறான்

சுய மன விகாரம்
-------------------------

யாருக்கும் தம் நிர்வாணத்தைப் பற்றி
யோசிக்கும் அல்லது பேசும்
தைரியம் வந்துவிடுவதில்லை..
யாவரின் நிர்வாணமும்
மறைக்கப்பட வேண்டிய
படுபயங்கரமாதாகவே இருக்கிறது...

வியாழன், 3 மார்ச், 2011

என்னோடு நான்

















மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

புதன், 2 மார்ச், 2011

சங்கீதங்கள் - 2


















காதல்


கோடி தேவதைகள்
கூடி காக்கும்
தெய்வநரகத்தின் கருவில் இருந்து
உயிர்த்த புனித பாவம்..

யுகயுகங்களுக்கு முன்
ஊழிக்காலம் பிறப்பதற்கு
முந்தைய அந்திம பொழுதில்
ஆத்தீக சாத்தான்களின்
தெய்வீககரங்களால்
அருளப்பட்ட தேவசாபம்..

ஆதாமின் விழியிலிருந்து
ஏவாளின் மனதில் உதிர்ந்த
தூய வெறி
வெட்கப்பொறி

இறைவா!
அந்த வெறியை என்னிலும் விதை
உம் பரிசுத்த நாவினால்
தேவசாபத்தை எனக்கும் தருக
புனித பாவத்தில் மூழ்கி
புணர்ந்து உம்முடன் கலக்க
தெய்வநரகத்தின் விந்தை எனிலும்
சிந்துவீராக..

செவ்வாய், 1 மார்ச், 2011

சங்கீதங்கள் - 1


















பூக்களின் மகரந்த சேர்க்கை போல்
நிகழ்ந்தது நம் புணர்ச்சி..

இருளின் அடி பாதாளத்தில்
சரிந்த வெளிச்ச துகளாய்
தூவினாய் உன் அன்பை என்னில்..

மயக்க ரகசியங்களை
மறைக்கும் திரைச்சீலையை கிழித்து
உனை நோக்கிய
பயண திசையின்
பாதையை தெளிவித்தாய்..


ஐப்பொருள் கடந்த
மெய்ப்பொருளே
நீ ஈந்த அன்பையும் தெளிவையும்
யார்க்கும் கொடுக்க
அருள்க எனக்கு..

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை






















அவனின் தோட்டா
புணர்ச்சியிலீடுப்பட்டிருந்த
அந்த மிருகத்தின்
பிறப்புறுப்பில் பாய்ந்திட மரணக்குரலெழுப்பி
அது துடித்த தருணத்தில்
குரூர விழிகளோடு
வக்ர புன்னகை பூத்தவனின்
கனவுகளில் பாய்ந்து
அந்தரங்க உறுபுகளை குதறி
இரத்தம் நக்க
அலறி எழுந்தவன் எதிரே
பிளந்த வாய்களில் மரணம் வழிய
உயிர் பிதுங்கிய கண்களால்
அவனை பார்த்துக் கொண்டிருந்தது
விறைத்த மிருகத்தின் தலை....

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பாவங்களின் கூலி





















யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

 பாவத்தை உணர்ந்து
செப்பனிட முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவட்டை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய இயலாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

வியாழன், 17 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை














போக போக குறுகும் இத்தெரு கோடியில்
பூட்டிக் கிடக்கிற வீட்டில்
வருஷங்களாய் அண்டியிருக்கும் அமைதியை /
வருஷங்களாய் தனிமையை புணர்ந்திருக்கும் அமைதியை
தனதாக்கிக் கொள்ள தாகிக்கிறது
நிச்சலனமற்ற மனம்..

புதன், 16 பிப்ரவரி, 2011

உன் வீடு












உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடு கூடிய தலையசைப்போடும்
எரிச்சலோடு கூடிய முகச்சுழிப்போடும்
உதட்டை பிதுக்குகிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம்
உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீட்டில் வெற்று சூன்யமே படர்ந்திருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

photo

யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதார்ண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருவரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு திரும்பி வரலாம்

இதழலைப்பாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரவும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருவரை..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒரு சமயத்தில்




ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று
யாவும் இருந்த‌து

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..

வியாழன், 10 பிப்ரவரி, 2011

எழுதிக் கொண்டிருந்தான் அவன்




















யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

புதன், 9 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை



என்னை பார்க்க வந்திருந்தாள் அம்மு
எப்பொழுதும் போன்ற மகிழ்ச்சியும்
குழந்தை போன்ற இனிமையும்
அவளின் குரல்களில் நேற்று இல்லை..

மிகவும் அயர்ச்சியாகவும்
கனத்தடர்ந்த துக்கங்கள் நிறைந்தவளாகவும்
பாறையொன்றை வெட்டி முகத்தில் ஒட்டிக் கொண்டவளை போலவும்
இறுக்கமானவளாக இருந்தாள்..

அப்பொழுது என் வீட்டின் பின்புறத்தில்
உள்ள ஆலமரத்தின்
ஒரு மருங்கில் கழுகொன்று அலறிக் கொண்டும்
மற்றொரு மருங்கில் குயிலொன்று கூவிக் கொண்டும்
இன்னொரு மருங்கில் காகமொன்று கரைந்து கொண்டுமிருந்தது

அருகே சுற்றுச் சுவர்கள் எழுப்பிய
புதர் மண்டிய வெற்று மனையில்
கருநிறப் பாம்பொன்று சுவரேற
முயற்சித்துக் கொண்டிருந்தது..

அவளை அழைத்து அவற்றை காண்பித்தேன்

நிச்சலனத்தில் நிரம்பினாள் அம்மு....

திங்கள், 24 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை




அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்

பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன

அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு

பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன

ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்

போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..

அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

வியாழன், 20 ஜனவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை




ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ

செவ்வாய், 18 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை




மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

மிகைகளால் மீதங்களால் நிரம்பிக் கிடந்தாய்
மிகைகளால் மீதங்களால் நிரம்ப நிறைந்தாய்
நிறைந்தாய் நிறைந்தாய் நிறைந்தாய்
இரைந்தாய் இரைந்தாய் இரைந்தாய்
இரைந்து இரைந்து இரைந்து போன வழியில்
இரந்து இறந்து இரைந்திருந்தாய்

சுரந்தாய் கரந்தாய் கரைந்தாய்
கரைந்து கரைந்து உறைந்தாய்
உறைந்து உறைந்து கரைந்தாய்
உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து மிகைந்தாய்
மிகைந்து மிகைந்து குறைந்தாய்
மறைந்தாய்
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்