செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

வழுவமைதிவகை வகையாய்
சேலை சுடிதார் தாவணி என்றணிந்து
அதற்கொத்த அலங்காரமும் புனைந்து
முகைந்திருப்பாள்..

மென்மையாகவும்
மிரட்டல் குரலிலும்
சில நேரம் வெம்மையாகவும்
*சிக்னல் கேட்பாள்*


நிறுத்த குறி விழுந்து
நிற்க நேர்கையிலெலாம்
என்னிடமும் வாங்கிவிடுவாள்
ஒரு ரூபாயை…


நானும்
நாளுக்கொரு நாணயத்தை
ஞாபகமாய் எடுத்துவைப்பேன்
அவளுக்கென

யாதென்று தெரியவில்லை
யார்க்கும் கூறாமல்
எங்கேயோ ஏகிவிட்டாள்

அவள் கையுற
ஆயத்தாமயிருந்த நாணயங்களும்
என் பையிலேயே தேங்கின..

கொடுப்பவர்க்கு ஆசிர்வாதமும்
கொடுக்காதவர்க்கு முகசுழிப்பும்
கேலி செய்வோர்க்கு
கெட்டவார்த்தையும் என
அவள் சிந்தும் யாதுமின்றி
வெறுமையில் வீடு கொண்டது
“சிக்னலும்”

அப்புறமொரு நாள்
விண்ணேந்திய விண்மீன்கள்
மண்ணாந்து பார்த்திருக்கும் வேளையில்
தற்செயலாய் சந்தித்தேன் அவளை..

வழக்கமான நாணயத்தை
நீட்டியவாறு
வராமைக்கு காரணம் கேட்டேன்

*நிர்வாணம்* செய்து கொண்டேன்
இனியும் வரமாட்டேன்” என்றாள்..

பாலிளம் மழலையிடம்
தோல் கசங்கிய கிழவியிடம்
வரம்பு தாண்டும் வாச்சாயனர்கள்
விடவா போகிறார்கள் அவளையும்..


(*சிக்னல் கேட்டல் - சிக்னல் இரத்தல், இதுமாதிரி கடை கேட்டல், பஜார் கேட்டல், ரயில் கேட்டல் என்று பல இரத்தல்கள் உண்டு

*நிர்வாணம் - ஆண் அம்சங்களை நீக்கும் அறுவை சிகிச்சை, நிர்வாணம் செய்து கொண்டவர்களைதான் திருநங்கைகள் என்றழைப்பார்கள், ஆண்மையின் அம்சத்தோடு பெண் உடையோடு உலவுவர்களை கோத்தி என்று சொல்வார்கள்)

கருத்துகள் இல்லை: