Photobucket

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை






















அவனின் தோட்டா
புணர்ச்சியிலீடுப்பட்டிருந்த
அந்த மிருகத்தின்
பிறப்புறுப்பில் பாய்ந்திட மரணக்குரலெழுப்பி
அது துடித்த தருணத்தில்
குரூர விழிகளோடு
வக்ர புன்னகை பூத்தவனின்
கனவுகளில் பாய்ந்து
அந்தரங்க உறுபுகளை குதறி
இரத்தம் நக்க
அலறி எழுந்தவன் எதிரே
பிளந்த வாய்களில் மரணம் வழிய
உயிர் பிதுங்கிய கண்களால்
அவனை பார்த்துக் கொண்டிருந்தது
விறைத்த மிருகத்தின் தலை....

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பாவங்களின் கூலி





















யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

 பாவத்தை உணர்ந்து
செப்பனிட முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவட்டை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய இயலாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

வியாழன், 17 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை














போக போக குறுகும் இத்தெரு கோடியில்
பூட்டிக் கிடக்கிற வீட்டில்
வருஷங்களாய் அண்டியிருக்கும் அமைதியை /
வருஷங்களாய் தனிமையை புணர்ந்திருக்கும் அமைதியை
தனதாக்கிக் கொள்ள தாகிக்கிறது
நிச்சலனமற்ற மனம்..

புதன், 16 பிப்ரவரி, 2011

உன் வீடு












உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடு கூடிய தலையசைப்போடும்
எரிச்சலோடு கூடிய முகச்சுழிப்போடும்
உதட்டை பிதுக்குகிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம்
உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீட்டில் வெற்று சூன்யமே படர்ந்திருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

photo

யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதார்ண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருவரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு திரும்பி வரலாம்

இதழலைப்பாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரவும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருவரை..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒரு சமயத்தில்




ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று
யாவும் இருந்த‌து

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..

வியாழன், 10 பிப்ரவரி, 2011

எழுதிக் கொண்டிருந்தான் அவன்




















யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

புதன், 9 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை



என்னை பார்க்க வந்திருந்தாள் அம்மு
எப்பொழுதும் போன்ற மகிழ்ச்சியும்
குழந்தை போன்ற இனிமையும்
அவளின் குரல்களில் நேற்று இல்லை..

மிகவும் அயர்ச்சியாகவும்
கனத்தடர்ந்த துக்கங்கள் நிறைந்தவளாகவும்
பாறையொன்றை வெட்டி முகத்தில் ஒட்டிக் கொண்டவளை போலவும்
இறுக்கமானவளாக இருந்தாள்..

அப்பொழுது என் வீட்டின் பின்புறத்தில்
உள்ள ஆலமரத்தின்
ஒரு மருங்கில் கழுகொன்று அலறிக் கொண்டும்
மற்றொரு மருங்கில் குயிலொன்று கூவிக் கொண்டும்
இன்னொரு மருங்கில் காகமொன்று கரைந்து கொண்டுமிருந்தது

அருகே சுற்றுச் சுவர்கள் எழுப்பிய
புதர் மண்டிய வெற்று மனையில்
கருநிறப் பாம்பொன்று சுவரேற
முயற்சித்துக் கொண்டிருந்தது..

அவளை அழைத்து அவற்றை காண்பித்தேன்

நிச்சலனத்தில் நிரம்பினாள் அம்மு....