வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எனக்காக இல்லாவிடினும் யார் யாருக்காகவோ
வளர்த்த ஆடுகளும் கோழிகளும்
வயதாகி பேரன் பேத்தி எடுத்திருக்குமோ
எங்காவது ஒரு சந்தையில் காசாகவோ ?
ஏதாவது ஒரு விருந்தில் கறியாகவோ
ஆக்கப்பட்டிருக்குமோ ?

வளர்த்த செடிகளுக்கும் கொடிகளுக்கும்
என் ஸ்பரிசமும் வாசமும்
நினைவிருக்குமோ ? இருக்காதோ ?
இல்லை அவைகளே
தடமின்றி சுவாசமிழந்திருக்குமோ ?

என் முகத்தோடான பரிச்சயம்
அண்டைவீட்டுக்காரர்களுக்கு இருக்குமோ ?
அல்லது
ஐயத்தோடான பார்வையை
என் புன்னகைக்கு பதிலளிபார்களோ ?

கூரைவீடெல்லாம்
காரைவீடாகி இருக்கிறது..

பிழைப்புக்கு வெளியூர்
பெயர்ந்தவர்களின் வீடுகள் சில
பாழடைந்து கிடக்கிறது..

ஒரு புறம் தென்னையும்
மறுப்புற வயலும் அணி வகுத்த
ஒற்றையடிப்பாதை
தார்ப்பாதையாகி
தென்னையும் வயலும் இல்லாத
வெயில் பாதையாகி இருக்கின்றன..

வயலில் வெள்ளை மொட்டுக்களாய்
பூக்கிற கொக்குகள் எல்லாம்
எந்த திசையில் திரிகின்றனவோ ?
அவைகளுக்கு இறையாகிற
தவளைகளும் மீன்களும்
எங்கு ஜீவிக்கின்றனவோ ?

என்னத்தான் வெளிநாடு சென்று வந்தாலும்
'பஞ்சம் பிழைக்க' என்பதுதான்
சரியாக பொருந்துகிறது..

போனவையோடு போனவை பல
வந்த போதும் இழந்திருப்பவை பல
எனினும்
மீண்டும் போக வேண்டும் என்பதில் தான்
கவனமாக இருக்கிறது புத்தி..

எனக்காக இல்லாவிடினும்
யார் யாருக்காகவோ

கருத்துகள் இல்லை: