வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அவ‌ன்

தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்

த‌ன்னுடைய‌ அதிந‌வீன‌ பொய்க‌ளால்
சாதுர்ய‌மாய் என்னையும் அந்த‌ க‌ற்ப‌னை உல‌க‌த்துக்கே
இட்டுச் சென்று
அத‌னை உண்மை என்று ந‌ம்ப‌வைத்துவிடுகிறான்

பிற‌கொரு த‌ருண‌த்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகச‌க் க‌தைக‌ளை
அவ‌ன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுக‌ல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க‌ ‌
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்

அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த‌ விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது

அவ‌ன் க‌ற்ப‌னை உல‌க‌த்தில் கூட‌
யாரையும்
ச‌ந்தேக‌த்தோடும்
அவ‌ந‌ம்பிக்கையோடும்
குழ‌ப்ப‌த்தோடும்
ப‌ய‌த்தோடும்
பொய்க‌ளோடுமே அணுகுகிறான்

அவ‌ன் த‌ன் ஒவ்வொரு மாந்த‌ரையும்
அதி தீவிர‌ க‌ண்காணிபபுக் குட்ப‌டுத்தி வைத்திருக்கிறான்

சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவ‌ன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்‌
என‌ எனக்கு தெரியும்

ஆதலாலே
தான் பொய்க‌ளிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவ‌னின் ஸ்திரமான ந‌ம்பிக்கையை
நானும் திட‌ப்ப‌டுத்திக் கொண்டே இருக்கிறேன்

நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே‌ பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்க‌ள்

கருத்துகள் இல்லை: