Photobucket

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ம‌க்க‌ட்பேறு















இருட்டான ஒரு பாதையில் இருந்து
தப்பித்து வெளியேறும்
பயத்தோடே இருக்கிறது
இன்றைய கலவியெல்லாம்

பதினைந்தாண்டாக‌
குழந்தை இல்லாததின் பழியை
இம்முறையேனும் அகற்றவேண்டும்
எனும் முனைப்போடே நிகழ்வதனால்
பரவ‌சத்தை காட்டிலும் பெரும்பாலும்
பதட்டமே பெருக்கெடுக்கிறது

பாலியல் புத்தகமனைத்தும்
பக்கம் மிஞ்சாமல் கற்று
ஊழியல் பார்த்து
உதிரம் கழியும் விடாய் பார்த்து
காமம் பழகி
அடுத்தமுறை அடிவயிறு பிடித்து
அவள் அமரும் போது
சவ ஊர்வலம் போன தெருவில் வீசுகிற‌
மரணம் வாசமே பரவுகிறது
வீடு முழுக்க‌

காதலுமில்லாமல்
காமமுமில்லாமல்
கட்டாயத்திற்காக‌
சுவாரஸ்யமற்று மாத்திரையின் உந்துதலால் நிகழும் விரவுதல்
வெறுமையானதாகவும்
விரக்தியானதாகவும்
தோல்வியை நினைந்த அச்சகரமானதாகவும்
தன் பிறப்புறுப்பு தெரிவதறியாமல்
தாந்தோன்றியாய் அலையும்
மனபிறழ்ந்தவனின் நீக்க முடியாத‌
மன அழுத்தை பாய்ச்சுவதாகவும்
இருக்கிறது

குழந்தையின்மை இந்த துக்கம்
ஒவ்வொரு பிள்ளையில்லாதவருக்கும்
பகலை காட்டிலும்
இரவே பீதியுண்டாக்குவதாய் இருக்கிறது
தனிமையே அமைந்துவிட கூடாதென்னும்
பிராத்தனை உடையதாகவும்
கலவியே நிகழ்ந்துவிட கூடாதென்னும்
பயமுடையதாகவும் இருக்கிறது

காமம் பழகுதல்
மன அழுத்தத்தை குறைக்குமெனும்
விஞ்ஞான கூற்று
குழைந்தையற்றோற்கு பொருந்துவதே இல்லை
காமம் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது..

விழாக்க‌ளும்
ச‌ந்திப்புக்க‌ளும்
தெரிந்தே ம‌ற‌க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தாக இருக்கின்ற‌ன‌
"எத்தனை குழ‌ந்தைக‌ள் ? அல்ல‌து
இன்னும் பிள்ளை இல்லையா ? "
எனும் கேள்விக்களுக்காகவே

கருத்துகள் இல்லை: