ஞாயிறு, 1 ஜூலை, 2012

சில்லுகள் - 1


காற்றிலொரு வண்ணத்துப் பூச்சியென
பரிணமித்து
எங்கு செல்லினும்
என்னை பின் தொடர்ந்து
அருகில் அகல சிறகு பரப்பி வந்தமரும்
உன் நினைவுகள் மட்டும்

*****************************************************

கார்பரேட்/ஐடி வாழ்க்கை அல்லது வேலை


உதற இயலாத புழுதியென
உடலில் அசதியை சுமந்தவாறு
பொழுதுபூராவும் அலைந்து சோர்வுற்று
ஓய்வெடுக்க ஆயாசமாய் அமரும் தருணத்தில்
ஆசனத்தில் இருந்து
ஓடு ஓடு இன்னும் ஓடுவென
குற்றும் ஒரு முள்

***********************************************

பகட்டு செறிந்திருக்கும் இந்த நகரத்தில்
பெருகியோடு கவர்ச்சியின் பிரளயத்தில்
அடித்து செல்லப்பட்டுவிடாமல்
சிரத்தையோடு பாதுகாத்து வைத்திருக்கிறேன்
நம் காதலை

***********************************

நேற்றிந்த புல்வெளியில் நிகழ்ந்த சந்திப்பில்
நாம் சுமந்திருந்த கௌரவங்களுக்கு
எந்த பங்கமும் உண்டாகிவிடாத கவனத்தோடு
பேசிக் கொண்டிருந்துவிட்டு பிரிந்தோம்
சுமக்க முடியாமல் சுமந்திருந்த காதலை
இறுதிவரை பரிமாறி கொள்ளாமல்

**************************

இந்த புதிய அப்பார்ட்மெண்டில்
அறிமுகத்திற்கு பிந்தைய சந்திப்புகளில்
"எப்படி இருங்கீங்க ?" என கேட்கும் பக்கத்துவீட்டுக்காரருக்கு
பத்து வருடத்திற்கு முன்
நீ வழங்கிப் போன கொடுங்கசைப்பை
இன்னும் செரிக்க இயலாமல் வதையுறுவது பற்றி
தெரிந்துவிட கூடாதென்று
ஒவ்வொருமுறையும்
வெறுமனே புன்னகைத்து மட்டும் கடக்கிறேன்

கருத்துகள் இல்லை: