திங்கள், 9 ஜூலை, 2012

காமக் கிழத்தியான ஸ்டெஃபி கிராஃப்
என் மூத்தோர்களுக்கு
ஸ்டெஃபி கிராஃபை மிகவும் பிடிக்கும்
அவளின் ஒரு ஆட்டத்தையும்
அவர்கள் தவறவிட்டதில்லை

அவளின் தொடர் வெற்றிகளைப் பற்றி
பேசிய தருணத்திலும்
அவள் பந்தை அடிக்கும் லாவகத்தைப் பற்றி
வர்ணித்த பொழுதிலும்
அவளின் அழகைப் பற்றி
பேசவும் அவர்கள் மறுத்ததில்லை

ஸ்டெஃபியிடம் அவர்களுக்கிருந்த‌ ப்ரியம்
அவளின் ஆட்டத்திறன் மீதான
மரியாதையென எண்ணியிருந்தேன்
பந்தையடிக்க ஓடும் சமயத்தில்
ஆடும் அவளின் அங்கங்களிலும்
வெளிப்படும் உள்ளாடையிலும்
தம் வக்கிரத்தின் நெருப்பை
வடித்துக் கொண்டிருந்தார்கள்
என்பதை அறியும் கணம்வரை

இப்போதெல்லாம் யாருடனும் அமர்ந்து
மங்கையர் ஆட்டம் பார்க்கேவே பதட்டமாக இருக்கிறது
என்னிலிருந்து வழியும் வக்கிரத்தின் துளிகளையும்
அவர்கள் அடையாளம் கண்டுவிட கூடுமோவென‌

கருத்துகள் இல்லை: