Photobucket

ஞாயிறு, 8 ஜூலை, 2012

தலைப்பற்ற கவிதை




















திறந்து உள்ளே
நுழைய முயலுகையில்
இழுத்து சாத்துகிறாய் மனதை

எல்லயற்ற மனதுக்கு எல்லை வகுகிறாய்
சுற்றுச்சுவர் எழுப்புகிறாய்
கதவு வைக்கிறாய்

யாரும் தாண்டி உள்வந்துவிடும்
சாத்தியங்கள் உணரும் தருணத்தில்
பலவீனங்களை கண்டறிய
பலகோண பரிசீலனை செய்கிறாய்
கூரையீட்டு மூட முடிவெடுத்து
கனத்த கம்பிகள் மேல் கலவை படர்த்தி
தடித்த மேல்தளம் அமைக்கிறாய்

தனித்த வெற்றறையின் புழுக்கத்தில்
உள்ளிருக்க இயலாமல்
கதவை திறந்து
அகமும் புறமும் வருவது போவதுமாய் இருக்கிறாய்

மிதமிஞ்சிய தனிமையின் கணங்களில்
தட்டப்படாத கதவுகளை திறந்து
யாரும் காத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாய்

யாரும் இல்லாததால் தொற்றிக் கொள்ளும் சோர்வில்
தொய்ந்து உள் திரும்புகிறாய்
யாரும் இருந்திருந்தால் தொற்றிக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியென திட்டவட்டமாய் உரைக்கிறாய்

சுமக்க முடியாத உனது
தனித்த அறையை தூக்கி கொண்டு
ஊரூராய் போகிறாய்
கோவில் கோவிலாய் திரிகிறாய்
ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் குருஜி சொன்ன‌
அமுத மொழிகளின் உபயத்தில்
சுவரை கொஞ்சம் பேர்த்து
குளிர்சாதனம் பூட்டுகிறாய்
வெளிப்புறம் கேமிராக்கள் பொருத்தி
கணினி மூலம் கண்காணித்தவாறு
உட்புறமே அமர்த்து கொள்கிறாய்

வெளியே உன்னை யாரும் பார்த்ததாக‌
சொல்லுவதே இல்லை

கருத்துகள் இல்லை: