வியாழன், 12 ஜூலை, 2012

செறிவிழந்த இரவும் அதன் காமமும் தனிமையும்...

செறிவிழந்த ஒரு இரவின் இருளில்
ஊளையிடும் வேட்டைமிருகமென
அலைகிறது காமம்

அது
என் உடற்காட்டின் எல்லா மூலைவிரையிலும்
தன் ஈரநாவினை ஒரு சர்ப்பமென நெளியவிட்டு
என் பரப்பெங்கும் மூட்டுகிறது
மெலிந்த உஸ்ணத்தை

அறை விளக்கின் வெளிச்சத்தில்
ஊடிய நிலா ஒளியாய்
அது என்னை தன்னுள் கரைக்க ஆரம்பித்த
தருணத்தில்
என் அறைக்கதவை திறந்து கொண்டு நுழைகிறார்கள்
இதுகாறும் நான் சந்தித்தப் பெண்டீர் யாவரும்.

இந்த காமத்தின் வேட்டைமிருகத்துக்கு
அவர்கள் உவப்பளிப்பவர்களாக இல்லாததால்
யாவரையும் நிராகரித்து
என்னையே இன்னும் குரூரமாய் புசிக்கிறது அது

என் பலம் முற்றையும் இழந்து
அதனுள் நான் அடங்கி ஓடுங்குகையில்
ஒரு மதயானையென மூர்க்கமாய் என்னை
தனிமையின் மேய்ச்சல் நிலத்தில் எறிந்து
மேலும் என்னை வேட்டையாடுகிறது

என் அறைக்குள் நுழைந்த பெண்டீர்
இன்னும் போகாமலேயே இருக்கிறார்கள்
அவர்கள் யாவருக்கும் விடைக்கொடுத்து
அறை கதவை சாத்த மனமற்றிருக்கும் வேளையில்
இன்னும் கடப்பதற்கு சாத்தியமற்ற நெடுந்தொலைவோடு இருக்கிறது
செறிவிழந்த இரவும்
அதன் காமமும்
தனிமையும்...

கருத்துகள் இல்லை: