வியாழன், 5 ஜூலை, 2012

வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது


வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது

அது சூரியன் தன் எல்லா கிரணங்களையும்
சிறுக சிறுக பின்வாங்கிக் கொண்டிருத்தலை
அறிவிக்கிறது

இந்த நகரத்தின் எல்லா மூலைகளிலும்
இந்த மலைகளின் பின்புறத்திலும்
ஆளில்லாத அடுக்கக வீடுகளிலும்
நாள் பூராவும் பதுங்கியிருந்த குளிர்
ஒரு பாம்பென மெல்ல வெளிவருவதை
எனதறை மின்விசிறி உணர்த்துகிறது

இந்த நகரம் முழுக்க‌
கடைசி வெம்மையையும்
தன் வெளிச்சத்தைப் போலவே சூரியன்
வழித்தெடுத்த பின்
ஒரு உறைபனியின் வீரியத்தோடு
பரவக்கூடும் கொடுங்குளிர்

அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவே
ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஒரு சிகிரெட்டையும் கொஞ்சம் நெருப்பையும்

பலமுறை அவஸ்தைப்பட்ட பிறகும்
உங்களை போலவே
நானும் எப்போதும் சிந்திப்பதே இல்லை
சிகிரெட்டும் தீர்ந்துவிட்ட பின்னர்
எப்படி இக்குளிரை சமாளிப்பதென‌

1 கருத்து:

Athisaya சொன்னது…

ஆஹா....!மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.
சந்திப்போம் சொந்தமே..!
http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html