Photobucket

திங்கள், 25 ஜூன், 2012

திடீரென முளைத்துவிடும் நதி















திடீரென முளைத்திருக்கும் இந்நதியை குறித்த
எந்த தகவலும் எந்த துப்பும் எந்த அறிதலும்
இல்லை என்னிடம்..

காற்றில் கூர்தீட்ட முயலும்
மொன்னை மடிப்புக்களில்
வெளிச்சத்தை மிளிர்த்தி ஓடும்
அதன் வனப்பு என்னை
அதன் மீது வாஞ்சையுற வைக்கிறது

நகரும் மேகங்களையும்
நெளியும் வானத்தையும்
கிழித்துள் பாய்ந்தொரு மீனென மாறிவிடும்
என் எத்தனிப்பை நடுக்கமுற‌ செய்கிறது
அதன் மர்ம ஆழம் குறித்த அச்சமென்றாலும்
நீந்துதலெனும் முடிவை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை

யாருடையது இந்நதி
யாருடைய கடலில் இது கலக்கிறது
யாரும் இதனுள் ஏற்கனவே நீந்துகிறார்களா
இது என்னுடைய நதிதானா
நான் சேர வேண்டிய கடலுக்குத்தான் போகிறதா
இனி என் நிர்வாண‌த்தை இதுதான் அறிய போகிறதா
என் முழுமையையும் இதுதான் சுவைக்கப்போகிறதா
அல்லது இதன் முழுமையை நாந்தான் சுவைக்க போகிறேனா
என கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில்
என் கால்நுனி வரை கரையை நகர்த்தி
தன்னை விரிவு படுத்திவிட்டது இந்நதி

சில்லிடும் ஈரக்கைகளால் கால்களை சுற்றி
பொதுக்கென உள்ளிழுத்து
ஒரு மலைப்பாம்பென விழுங்கி
நகர துவங்குகிறது சிறு சலனத்தோடு
பின்னிதன் சலனமடங்கிய வேளையில்
நீரில் கரைகிற பனிக்கட்டியென‌
இதனுள் விரவ ஆரம்பிக்கிறேன்
பிறகு இது என்னுடையதும்
நான் இதனுடையதுமாய் மாறிவிட்ட போதில்
காயாத தன்னீர மணலை என் கைகளில் கொடுத்து
வற்றிவிட்டது இந்நதி

இதே போன்ற நதியின்
ஒரு கரையில்
நீங்களும் கூட நடந்து கொண்டிருக்கலாம்
காயாத ஈர மணலை கைகளில் ஏந்தியவாறு..

ஒவ்வொருவருக்கும் எங்னேனும்
வாய்க்க பெறுகிறது இதுபோலொரு நதி
பல புதிர்க‌ளுடன்
வற்றுவதற்காக‌வே அல்லது
பெருக்கெடுப்பதற்காகவே

1 கருத்து:

அப்துல் காதர் சொன்னது…

உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இக்கவிதைக்கு எப்போதும் முதலிடம் உண்டு.

உங்கள் வலைப்பூவில் மீண்டும் உங்கள் படைப்புகளைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துகள் தோழரே!