Photobucket

திங்கள், 24 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை




அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்

பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன

அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு

பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன

ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்

போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..

அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

கருத்துகள் இல்லை: