வெள்ளி, 16 ஜூலை, 2010

உயிர்
ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மற்றொன்று.

2 கருத்துகள்:

அ.அப்துல் காதர் சொன்னது…

அழகான கவிதை..!

கவிதையின் சந்தத்தில் மனதைப் பறிகொடுத்தேன்..!

கோவை மு சரளா சொன்னது…

வார்த்தைகளில் தெரிகிறது காதலின் பரிணாமங்கள் அருமை ...........மரபை இசைத்து புதுமை வெளியீடு
நானும் கவிதையும் http://kovaimusaraladevi.blogspot.in/