Photobucket

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஒரு ஜென்னாய் இரு - 2

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதையில் நான் உணர்ந்து கொண்டது என்ன வென்று சொல்ல விழைகிறேன்..

அவரவர் மனநிலைக்கேற்ப கருத்துக்கள், கோணங்கள் மாறும்..

என் புரிதல் இதுதான்..

இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சப்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..

3 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல திறனாய்வு !

இரா.அன்புராஜா சொன்னது…

Congrats!
Really interesting, Go head,, Eager to read this more!!

அப்துல் காதர் சொன்னது…

ஆதி அவர்களுக்கு வணக்கம்..

தங்களின் புது முயற்சி நிறைவளிக்கிறது. இதனை நிறுத்தி விடாமல் தொடர்ந்து பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.அப்புறம் பாஷோ கவிதையிலிருந்து நான் புரிந்து கொண்டது:

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்

இதில் பழைய குளம் என்பதை நம்முடைய மனமாகப் பார்க்கிறேன். தவளை என்பதை புற உலகில் நிகழும் நம்மை பாதிக்கும் நிகழ்வுகளாக அடையாளம் காண்கிறேன்.பிறகு தண்ணீர் சத்தம் என்பதை அந்நிகழ்வுகள் நம் மனத்தில் ஏற்படுத்தும் சலனமாகப் பொருள் கொள்கிறேன். ஒரு குளம் என்பது தொடர்ந்து தவளைகள் குதிப்பதும், வெளியேறுவதுமான ஓரிடமாகவும், தொடர்ந்து சலனங்கள் நிகழ்வது தவிர்க்கவியலாத ஓரிடமாகவும் உள்ளது. அவ்வாறே நம் மனமும் தொடர்ந்து புற உலக நிகழ்வுகளால் சலனங்களுக்குள்ளாகும் ஓரிடமாக உள்ளது. இதிலிருந்து நான் அறிந்து கொள்வது யாதெனில், சலனப்படாத மனம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதே.மேலும், தண்ணீரற்ற ஒரு குளத்தில் தவளை குதித்தாலும் சத்தம் ஏதும் கேட்காதது போலவே மனிதன் மனமற்றுப் போகும்போது சலனங்களும் அற்றுப் போகிறான்.அவ்வாறு மனமற்றுப் போவதே ஜென்னின் நோக்கம்.

வாழ்த்துகள்..!