Photobucket

ஞாயிறு, 1 மார்ச், 2009

புல்லாங்குழல்
















துளை துளையாய் கசிந்து
இழை இழையாய் எமது
இறுக்கத்தை களைய
எங்கு கற்றாய் ?

வறுமை சூரியன்
வயிற்றை சுடுகையிலும்
குளுமையை இதழ்களில்
குழுமிட வைக்க
உனக்கே இயல்கிறது..

கண்ணீர் முட்டி
கரையுடைகிற கண்களில்
உறக்கத்தை ஊட்டி
இமைகளை பூட்ட
உனக்கே தெரிகிறது..

உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

காதலன் விரல் தொடும் போது
கண்மூடும் பெண்ணை போல
நீ வருடும் போது
மூடிவிடுகின்றன எம்
புலன்களின் இமைகள்..

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..

பெண்ணோடு உதடு ஒட்டையில்
பேரின்ப சுவர்கள் திறந்திடும்
உன்னோடு உதடு ஒட்டையில்
உறைந்த நாளங்கள் எழுந்திடும்..

-ஆதி

2 கருத்துகள்:

ராம்.CM சொன்னது…

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

அருமையாகயிருக்கிறது...

ஆதி சொன்னது…

நன்றி ராம் அவர்களே