செவ்வாய், 3 மார்ச், 2009

கரப்பான் பூச்சி வார்த்தைகள்மெல்லிய மேனியின்
உள்ளிருந்து ஒரு பயம்
ஆபாய அதிர்வுகளை
அனுப்பிக் கொண்டிருந்தாலும்
உன் வற்புறுத்தலுக்கு மடங்கி
வர சம்மதித்தேன்..

வீட்டில் வெவ்வேறு பொய்யுரைத்து
ஊருக்கு தெரியாமல் துப்பட்டாவில்
முகம் மறைத்து
புறப்பட்டேன் உன்னுடன்..

வெயில் ததும்மும் சாலையில்
வேகம் குறையாமல் வாகனத்தை நீ முடுக்க
தேகம் பிரியாமல் நானுன்னை பிணைக்க – இன்ப
போகம் தளராமல் பயணித்தோம்

மனித நகர் விலகி
தனிமை நகர் நுகர்ந்தோம்
மணிக்கணக்கு தெரியாமல்
இனிக்க இனிக்க இன்பமுண்டோம்..

கண்ணாமூச்சி விளையாடினோம்
களைக்கும் வரை ஓடிப்பிடித்தோம்
என்னென்னவோ பேசிக்களித்தோம்
எண்ணியவை எல்லாம் செய்தோம்..

கோயில் சிலை மார்புகளையும்
குணமிழிந்து பார்க்கும்
கொடுங்காம பூனைகள்
குறுக்கிட்டன நமக்குள்

பட்டாம் பூச்சியாய்
பறந்திருந்த என்னை, விரலடைத்து
நிறம் பூசிய சிறகை பிய்தெறிந்து
சுவைக்க என்னுடலை
சவைத்து உண்ட மூர்க்கதனங்களை
நீயும் பார்த்துதானிருந்தாய்
எதிர்க்க துணிவின்றி..

கூட்டி குவித்து
குப்பையாய் என்னை வாரி
மீண்டும் வீட்டில் வீசி சென்றுவிட்டாய்..


அடுத்த மணி அடிக்கவிடாமல்
எடுப்பாய் என் அழைப்புகளை
சமீபங்களில் கடைசிவரை
அடித்தாலும் பதிலில்லை..


உன் நண்பர்கள் வழியே
அணுமதி பெற்று
அலுவலகம் வந்தேன்
உன்னை காண..

ஆறுதலாய் உன் தோள்களில் சாய்ந்து
அழுதென் பச்சை துயரங்களை எல்லாம்
சருகாக உகுக்க வேண்டும்
என்றெண்ணி வந்த என்னை
பந்திக்குப்பின் எறியும் இலையாய்
சந்திப்பில் நீ பார்த்தாய்..

“என்னை பார்க்க வேண்டும் என்றாயாமே ?”
“என்ன விஷயம் ?”
“எதுவும் உதவி வேண்டுமா ?” என்று
அந்நியனாய் அசைந்தன உன் இதழ்கள்


“பணமேதும் தேவையென்றாலும்
தயங்காமல் கூறு” என்று
கரப்பான் பூச்சியாய் ஊறிய வார்த்தைகள்
உண்டாக்கியது
உன்மீது அருவருப்பை..

“உன்னை காதலித்ததற்கு
அந்த காமுகர்களுக்கு
ஆசை நாயகியாய் இருந்திருக்கலாம்”
என்று அலறத்தோன்றியது எனக்கு

கருத்துகள் இல்லை: