Photobucket

வெள்ளி, 6 மார்ச், 2009

சுயப்புலம்பல்




காதாடும் தோடுக்கும் கதப்பாடும் குழலுக்கும்
வாதாடும் இதழுக்கும் வட்டாடும் விழியினுக்கும்
தோதான உவமைகள் தொகைதொகையாய் எடுத்தெழுதும்
சாதாரண வாழ்வொன்றில் சரிந்துதிர்ந்து போவேனா

நயவுலகு ஆசைகளின் நயனத்தில் எனையிழந்து
வயமாகி வாழ்வினின்ப மயக்கத்தில் மூழ்கிமூழ்கி
தயவான உன்னன்பின் தண்மைதனை உணராத
பயன்கெட்ட பிறப்பென்ற பதத்தோடு சாவேனா

போதைதரும் பொருளெல்லாம் போகமென்று சேகரித்து
சூதைவிட கொடியவனாய் சுகத்துக்கு அலைந்தலைந்து
பாதையென்று பார்வைபட்ட பக்கமெல்லாம் போய்தோய்ந்து
வேதப்பொருள் உன்நினைவை வேண்டாமென் றுவிடுவேனா

முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான தத்துவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

அங்கமெல்லாம் அண்டுகிற அந்தரங்க ஆசைகட்கு
தங்கமலர் தோகையரால் சிங்கார புனைவுசெய்து
சங்குஊதி சாமரமும் சங்கடப்ப டாதுவீசி
மங்குகிற ஆயுளதில் மங்கித்தேய்ந்து தீர்வேனா

எப்பழுதில் ஆழ்வேனோ எப்படித்தான் வாழ்வேனோ
முப்பாலின் முடிவுப்பாலில் முடிச்சுண்டு முடிவேனோ
அப்பாலுக்கு அப்பாலேகி அப்பழுக்கு அற்றவுந்தன்
கப்பலுக்கு காத்திருப்பே னோசொல்க பெரும்பொருளே!

3 கருத்துகள்:

kavithaikaL சொன்னது…

கப்பலுக்குள் காத்திருக்கும் புதிய தோழி .
nandinineelan@yahoo.com

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Seeni சொன்னது…

arumai!